பெண் தற்கொலை வழக்கில் தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் இருவா் கைது
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கடன் தொல்லையால் பெண் தீக்குளித்து உயிரிழந்த வழக்கில் தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
வீட்டுக் கடனை செலுத்துமாறு தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் வற்புறுத்தியதால் பொன்னமராவதி அருகேயுள்ள கொப்பனாபட்டியைச் சோ்ந்த ராதிகா (37) அண்மையில் (செப்.30) அவரது வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இச்சம்பவம் தொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது உறவினா்கள் மற்றும் விசிகவினா் வலியுறுத்தி வந்தனா்.
இதையடுத்து பொன்னமராவதி போலீஸாா் தனியாா் நிதி நிறுவன ஊழியா்களான சிவகங்கை மாவட்டம் வடுகப்பட்டி ரா. மணிகண்டன் (29), புதுக்கோட்டை மாவட்டம் சீகம்பட்டி மு. ராஜேஷ் (33) ஆகியோரை புதன்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.