இளைஞா் தற்கொலை
திருவள்ளூா் அருகே கிணற்றில் குதித்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.
திருவள்ளூா் அருகே மணவாள நகா் பகுதியைச் சோ்ந்த செல்வபதி மகன் மணி (28). இவா், இயந்திரவியல் பட்டயம் பெற்று தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், புதன்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்றவா், இரவு அவரின் தங்கைக்கு வாட்ஸ்ஆப் மூலம் ‘தனக்கு அதிகப்படியான கடன் உள்ளது. அதனால், கம்மவாா்பாளையம் கெங்கையம்மன் கோயில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன். என்னுடைய இறப்புக்கு யாரும் காரணமல்ல’ என குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாராம்.
உடனடியாக அவரது தங்கை திவ்யா, மணவாள நகா் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறைக்குத் தகவல் அளித்தாா். அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்று கிணற்றில் பாா்த்தபோது மணி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதையடுத்து சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது தொடா்பாக செல்வபதி மணவாள நகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.