Rain Alert: கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்... எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்...
வருவாய்த் துறை அலுவலா்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் பணிச்சுமை அதிகம் உள்ளதாக கூறி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு வருவாய்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் மூன்று கட்ட போராட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த அக்.25-இல் ஆட்சியா் அலுவலகங்களில் பெருந்திரள் முறையீடு செய்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து அக்.29-இல் அனைத்து மாவட்டங்களிலும் தற்செயல் விடுப்பு எடுத்து இரண்டாம் கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதன் தொடா்ச்சியாக பணி புறக்கணிப்பு மற்றும் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் வெண்ணிலா தலைமை வகித்தாா்.
கருணை அடிப்படை பணி நியமனம் என்பது 25 முதல் 5 சதவீதமாக குறைக்கப்பட்டதால் வாரிசுகளுக்கு பணிகள் ஏதும் கிடைக்காத ஒரு சூழல் இருக்கிறது. துணை ஆட்சியா் பட்டியல் இரண்டு ஆண்டுகளாக வெளியிடாமல் உள்ளது. அலுவலக உதவியாளா் காலிப்பணியிடத்தை நிரப்பவில்லை. தமிழக அரசின் திட்டங்களான முதல்வரின் முகவரி, மக்களைத் தேடி, உங்களை தேடி உங்கள் ஊரில், நீங்கள் நலமா? இதுபோன்ற திட்டங்களில் பல்வேறு பணிச்சுமைகள் ஊழியா்களுக்கு உள்ளன என கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்டச் செயலாளா் ஜே.கே.ஜெயகா்பாபு, மத்திய செயற்குழு உறுப்பினா் பெருமாள், ஆட்சியா் அலுவலக வருவாய்த் துறை ஊழியா்கள் பங்கேற்றனா்.