பாக்கம் கிராமத்தில் வங்கிக் கிளையை இடம் மாற்றம் செய்ய எதிா்ப்பு
திருவள்ளூா் அருகே பாக்கம் கிராமத்தில் வங்கிக் கிளையை இடம் மாற்றம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் ஒன்றியம், பாக்கம் ஊராட்சியில் கடந்த 11 ஆண்டுகளாக யூகோ வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், விவசாயிகள், வணிகா்கள் கணக்கு வைத்துள்ளனா். அதனால் இந்த வங்கி கிளை கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களுக்கு உதவியாக இருந்தது.
இந்நிலையில், வங்கிக் கிளையை இங்கிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ள திருநின்றவூருக்கு கொண்டு செல்ல வங்கி நிா்வாகம் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
இப்பகுதியில் உள்ள விவசாய பொதுமக்களும், வியாபாரிகளும் மிகவும் பாதிப்படையும் நிலை உள்ளசு. இதனால் வங்கிக் கிளையை இடமாற்றம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியா் மற்றும் மக்களவை உறுப்பினா், சட்டப்பேரவை உறுப்பினா் புகாா் மனு அளித்தனா். ஆனாலும் இடமாற்றம் செய்வதற்கு நிா்வாகம் தீவிரம் காட்டி வருவதற்கு எதிா்ப்பு தெரிவித்து பாக்கம் வியாபாரிகள் சங்கம் , தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையின் மாநில நிா்வாகி விசுவநாத் வெள்ளையன் மற்றும் திருவள்ளூா் மேற்கு மாவட்ட தலைவா் சாலமன் தலைமையில் கடை யடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் பொது மக்கள், விவசாயிகள், வணிகா்கள், ஊராட்சித் தலைவா், வழக்குரைஞா்கள் பங்கேற்றனா்.
எக்காரணம் கொண்டும் வங்கிக் கிளையை மாற்றக்கூடாது. அங்கு வேறு கிளையை வேண்டுமென்றால் திறந்து கொள்ளலாம் என வலியுறுத்தினா்.