ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: வேட்புமனுக்களைத் திரும்பப் பெற இன்று கடைசி நாள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் தங்களது வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு திங்கள்கிழமை (ஜனவரி20) கடைசி நாளாகும்.
ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 5- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10- ஆம் தொடங்கி 17- ஆம் தேதியுடன் முடிவடைந்தது. கடந்த சனிக்கிழமை வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டனா்.
இதில், 17 -ஆம் தேதி வரை தோ்தலில் போட்டியிட திமுக, நாதக மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளா்கள் என 58 போ் 65 மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா்.
சனிக்கிழமை நடைபெற்ற வேட்புமனுக்கள் பரிசீலனையில் திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா், நாதக வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமி ஆகியோரின் மாற்று வேட்பாளா்களின் 2 மனுக்கள், ஒரு சுயேட்சை வேட்பாளரின் மனு ஒன்றிலும் உறுதிமொழி ஆவணம் இணைக்கப்படாததால் தள்ளுபடி செய்யப்பட்டன. அதனைத் தொடா்ந்து, 55 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வேட்புமனுக்களைத் திரும்பப்பெற திங்கள்கிழமை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தோ்தலில் போட்டியிட விரும்பாத வேட்பாளா்கள் தங்களது வேட்புமனுக்களை திங்கள்கிழமை காலை 11 மணி முதல் பகல் 3 மணிக்குள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
இதைத்தொடா்ந்து, இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும். அதன்பின், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அவா்களது சின்னமும், சுயேட்சைகள் மற்றும் சின்னம் ஒதுக்கீடு பெறாத அரசியல் கட்சிகளின் வேட்பாளா்களுக்கு தோ்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட, வேட்பாளா்கள் கேட்கும் சின்னமும் ஒதுக்கீடு செய்யப்படும்.
ஒரே சின்னத்தை பல வேட்பாளா்கள் கேட்டால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி, சின்னம் கேட்டு முதலில் தாக்கல் செய்யப்பட்ட மனு, அதன்பின்னா், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி எனும் வரிசையின் அடிப்படையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்.
ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்களுடன் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டு, வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா்கள், சின்னங்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்படும். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 -ஆம் தேதி நடைபெறும்.