நோன்பிருந்தும் சிறப்பாக விளையாடி வரலாற்றுச் சாதனை படைத்த 17 வயது வீரர்..!
ஈஷா தமிழ்த் தெம்பு திருவிழாவில் நடந்தேறிய பறையிசைப் போட்டி!
தமிழர்களின் ஆதி கலைவடிவமான பறையாட்டத்தின் மீது பல்வேறு காரணங்களால் சாதிய அடையாளம் சுமத்தப்பட்டிருந்தது. துக்க வீடுகளில் மட்டுமே நிகழ்த்தப்படும் கலை வடிவமாக ஒடுக்கப்பட்டு இருந்தது. இன்று பறையாட்டத்தின் மீதான சாதிய அடையாளம் சற்றே உடைக்கப்பட்டு, பலரால் ஆதரிக்கப்படும் நிலைக்கு வந்திருந்தாலும் அதற்கு உரிய அங்கீகாரமோ, ஆதரவோ முழுமையாகக் கிடைக்காமல் இருக்கிறது.
இந்த நிலையில் கோவை ஆதியோகி முன்பு ஆதி பறையிசைக்கு தகுந்த அங்கீகாரம் கொடுக்கப்பட்ட அருமையான ஓர் நிகழ்வு நடந்தேறி இருக்கிறது. அது குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.
கோவை ஈஷா யோக மையத்தில் ஆதியோகி முன்பு தமிழ்ப் பண்பாட்டை கொண்டாடும் வகையில் தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா எனும் பிரமாண்ட விழா கடந்த பிப்ரவரி 27-ம் தேதி துவங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழ்ப் பண்பாடு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிலம்பம், கவிதை, கட்டுரை, ஓவியம், கோலம் மற்றும் பறையிசைப் போட்டிகள் நடைபெற்றன

இதில் குறிப்பாக மார்ச் 8-ம் தேதி ஆதியோகி முன்பு நடைபெற்ற பறையிசைப் போட்டிதான் பலரின் கவனத்தை தற்போது ஈர்த்துள்ளது. பறை இசைக்கென்று பிரத்யேகமான போட்டிகள் வேறெங்கும் இதுவரை பெரியளவில் நடைபெற்றதாகத் தெரியவில்லை. அந்த வகையில் இப்படியொரு போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள ஈஷாவிற்கு கண்டிப்பாக பாராட்டுகளைத் தெரிவிக்கலாம்.
ஈஷாவில் நடைபெற்ற பறையிசைப் போட்டியில் முதல் இடத்தை கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த பறையிசைக் குழு பிடித்தது. இரண்டாம் இடத்தை திருப்பூரைச் சேர்ந்த மின்னல் கிராமிய கலைக்குழுவும், மூன்றாம் இடத்தை கரூரைச் சேர்ந்த சிவசக்தி நாட்டுப்புறக் கலைக்குழுவும் வென்றன. முதல் மூன்று இடங்களைப் பிடித்த குழுக்களுக்கு பரிசுத் தொகைகள், பங்கேற்பு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் ஆதியோகி முன்பு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்பு வழங்கப்பட்டன.
அந்த வகையில் முதல் பரிசு பெற்ற குழுவிற்கு 33,000, இரண்டாம் பரிசு பெற்ற குழுவிற்கு 22,000 மற்றும் மூன்றாம் பரிசு பெற்ற குழுவிற்கு 11,000 என ரொக்க பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன. இந்த பறை இசைப் போட்டியில் நடுவர்களாக முன்னோடி பறை இசைக் கலைஞர்கள் கலைமாமணி பனையூர் ராஜா, கலைவளர்மணி செல்வராணி, கலைசுடர்மணி மின்னல் மூர்த்தி ஆகியோர் பங்கு பெற்றனர்.
இந்த பறையிசைப் போட்டிகள் குறித்து ஈஷா தன்னார்வலர், “சத்குருவின் வழிகாட்டுதலில் தமிழ்ப் பண்பாட்டைக் கொண்டாடும் தமிழ்த் தெம்பு திருவிழா கடந்த 3 வருடங்களாக ஈஷாவில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழர்களின் ஆதி இசைக் கருவியான பறைக்கு சிறந்த அங்கீகாரத்தை வழங்கும் ஒரு முயற்சியாக இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. இதில் குழுவாக கலைஞர்கள் பங்கேற்கிறார்கள், குறிப்பாக பாரம்பரிய முறையில் உருவாக்கப்பட்ட தோல் பறைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது” எனக் கூறினார்.
பறையிசைப் போட்டியில் எந்த அடிப்படையில் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுகின்றனர் என்ற கேள்விக்கு நடுவர்கள் பதில் அளிக்கையில், “குழு ஒத்திசைவு, ஆட்ட முறை - குறிப்பாக நடன அசைவுகள், ஆடைகள் மற்றும் தாளத்திற்கு ஏற்ப வெளிப்படுத்தப்படும் புதிய பரிமாணங்கள் உள்ளிட்டவற்றை மதிப்பீடு செய்து வெற்றியாளர்களைத் தீர்மானிக்கின்றோம்” எனக் கூறினர்.

இந்த பறையிசைப் போட்டியில் பங்கேற்ற நடுவர்களில் ஒருவரான கலைமாமணி பனையூர் ராஜா இது குறித்துக் கூறுகையில், “ஈஷா யோக மையம் பறையிசைக்கு முக்கியத்துவம் மற்றும் முன்னுரிமை கொடுத்து இருக்கிறார்கள். அதற்கு பறையிசைக் கலைஞர்களாகிய நாங்கள் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். பறையிசைக்கு ஊக்கம் அளிக்கவும், வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும் இந்தப் போட்டியை ஈஷா நடத்தியுள்ளது.
ஒரு பறையிசைக் கலைஞராக 40 ஆண்டு காலமாக இந்தத் துறையில் இருக்கிறேன். கலைமாமணி விருது வாங்கும் அளவுக்கு இந்தக் கலை என்னை உயர்த்தியுள்ளது. என் அனுபவத்தில் இதுவே முதன்முறையாக பறையிசைக்கு போட்டி என்ற ஒன்று நடைபெற்று பறையிசைக் கலைஞர்கள் அங்கீகரிக்கப்படுகின்றனர். போட்டி என்றால் சண்டை அல்லது பொறாமை என்று அர்த்தம் இல்லை. போட்டிகள் ஒவ்வொரு கலைஞருக்கும் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பாகவும், கலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான ஊக்கமாகவும் இருக்கும். அந்த வகையில் ஈஷா யோக மையம் தமிழ்த் தெம்பு திருவிழாவில் பறையிசைப் போட்டிகளை நடத்தி, அதில் நடுவராக பங்கேற்க என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி” எனக் கூறினார்.
கலைகளுக்கு சாதி, இனம், மொழி, தேசம் என்ற எந்த எல்லைகளும் கிடையாது. அந்த வகையில் எல்லையற்ற பரம்பொருளாகப் போற்றப்படும் ஆதியோகி சிவன் முன்பு ஆதி பறையிசைக்கு தகுந்த அங்கீகாரம் வழங்கப்பட்டு இருப்பது மிகவும் பொருத்தமான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்று சொன்னால் அது மிகையாகாது.