திண்டிவனம்: ``கள ஆய்வில் 8-ம் நூற்றாண்டு கொற்றவை, விஷ்ணு சிற்பங்கள்...'' - ஆய்வாளர் சொல்வதென்ன?
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மானூர் கிராமத்தில் வரலாற்று ஆய்வாளர் மற்றும் எழுத்தாளரான கோ.செங்குட்டுவன் பிப்ரவரி 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு தனியார் நிலத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதில் சுமார் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை மற்றும் விஷ்ணு சிற்பங்கள் கட்டெடுக்கப்பட்டன.

இவை குறித்து ஆய்வாளர் செங்குட்டுவன் கூறுகையில், "எட்டு கரங்களுடன் கூடிய கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. இவைற்றில் ஆறு கரங்களில் அதற்கேற்ப ஆயுதங்களை ஏந்தி, எருமையின் தலையின் மீது நின்றபடி சிற்பம் அமைந்துள்ளது. மானின் கழுத்தில் உள்ள அணிகலன்கள் மிக நுட்பமாக காட்டப்பட்டுள்ளது ,இந்த சிலையின் குறிப்பிடத்தக்க சிறப்பாகும். வலது கரம் மானுக்கு ஏதோ உண்பதற்கு தருவது போன்ற அமைப்பும் இடம்பெற்றுள்ளது. அவரது இடது முன்கரம் இடுப்பின் மீது வைத்த நிலையிலும் அவற்றின் அருகே கிளியும் காணப்படுகிறது.
பெரும்பாலான கொற்றவை சிற்பங்களில் இரண்டு அடியவர்கள் மட்டுமே காணப்படுவார்கள். ஆனால் இந்த சிற்பத்தில் மூன்றாவதாக ஒருவர் அமைந்துள்ளது இந்த சிற்பத்திற்கு கூடுதல் சிறப்பை தருகிறது. அழகான தலை அலங்காரத்துடன் நின்றியிருக்கும் இந்த நபர் அப்பகுதியை ஆட்சி செய்திருக்கும் குறுநில மன்னன் அல்லது படைத்தலைவராக இருந்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இதனால் இதுவரை கண்டெடுக்கப்பட்ட கொற்றவை சிற்பங்களை விட இவை தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சுமார் நான்கு அடி உயர பலகை கல்லில் நான்கு கரங்களுடன் நின்ற நிலையில் விஷ்ணு பிரம்மாண்டமாக காட்சியை அளிக்கிறார். அவரது பின்னிரு கரங்களில் வலது கரம் பிரயோகச் சக்கரத்தையும் இடது கரம் சங்கினையும் ஏந்தியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்னிரு கரங்களில் அபய முத்திரையும் இடுப்பில் கைவைத்து அழகிய ஆடை மற்றும் அணிகலன்களுடன் மிகவும் கம்பீரமாக காட்சியளிக்கிறார். கலைநயம் மிக்க இந்த இரண்டு சிற்பங்களுமே கிபி 8 முதல் 9 ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தை சேர்ந்தவை என மூத்த தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீதரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் 1200 ஆண்டுகளுக்கு முன் மானூர் கிராமம் எத்தகைய வரலாற்று சிறப்புடன் இருந்திருக்கிறது என்பதையும் இந்த சிற்பங்கள் எடுத்துரைக்கிறது. ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் இவை வழிபாட்டில் இருந்து வருவது குறிப்பிடத்தக்க ஒன்று.

"மானூர் சிற்பங்களைப் பார்த்த அதே நாளில், திண்டிவனம் நகரத்திற்குட்பட்ட நத்தமேடு எனும் பகுதியில் காளி என வணங்கப்பட்டு வரும் கொற்றவைச் சிற்பத்தைப் பார்த்தேன்.
இதில், அடியவர் ஒருவர் தான் காட்டப்பட்டிருக்கிறார். பின்னணியில் அதேபோன்று மான் அமைந்துள்ளது. ஆனால் கழுத்தில் அணிகலன் ஏதுமில்லை. அதே நேரம், மானின் கழுத்தில் உள்ள கயிற்றை கொற்றவை பிடித்திருப்பது போன்று சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு இடங்களுக்கும் உள்ள இடைப்பட்ட தூரம் என்பது ஒருசில கி.மீ. தான். ஆனாலும் சிற்பங்களுக்கு இடையே எவ்வளவு நுட்பமான வேறுபாடுகள் இருக்கிறது. இவை அனைத்து சிறப்புகளுமே சிற்பிகளின் கை வண்ணங்களே" என வியப்புடன் கூறினார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
