கேப்டனாக ஜோஸ் பட்லருக்கு கடைசி போட்டி; 179 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!
Hindi: சுதந்திரத்துக்கு முன்பே வெடித்த போராட்டம் - இந்தி திணிப்பு எதிர்ப்பு வரலாறும் இன்றைய நிலையும்
இன்று தமிழ்நாட்டு பள்ளிகளில் மாணவர்கள் தமிழை படிக்கிறார்கள் என்றால் அதற்கு பின்னால் 100 ஆண்டுகால போராட்டம் இருக்கிறது…
அப்போது ஒருங்கிணைந்த மதராஸ் மாகாணத்தின் காங்கிரஸ் ஆட்சியின் முதல்வராக இருந்தவர் ராஜகோபாலாச்சாரியார் என்கிற ராஜாஜி. நடுநிலைப் பள்ளிகளில் இந்துஸ்தானி கட்டாயம் என்று உத்தரவிட்டார். இந்தி, உருது இரண்டும் இந்துஸ்தானியின் அங்கங்கள். ஒரு சில வார்த்தைகளை நீக்கினால் அது இந்தியாகவும், உருதாகவும் பிரியும். ராஜாஜி படிக்கச் சொன்னது தேவனகரி ஸ்கிர்ப்ட்ல வந்த இந்துஸ்தானியை. அதாவது இந்தியை. ஏற்கெனவே பல்வேறு வகையில், இந்தி திணிப்பு நடந்து கொண்டிருந்த நேரத்தில், ராஜாஜியின் அறிவிப்பு இந்தி திணிப்பு எதிர்ப்புக்கான முதல் பெரிய போராட்டத்துக்கு வித்திட்டது.

1938-ல் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்தது. பல்வேறு அரசியல் இயக்கங்கள், தமிழ் அமைப்புகள், தலைவர்கள் இந்தி திணிப்பை எதிர்த்தன. இந்தி எதிர்ப்பு சங்கம் உருவாக்கப்பட்டது. கரந்தை தமிழ்ச் சங்கம், நீதிகட்சி, பெரியாரின் சுயமரியாதை இயக்கம், முஸ்லிம் லீக் இன்னு பல அமைப்புகள் தமிழை காக்க வேண்டும் என குரல் கொடுத்தனர். பெரியார், அண்ணா, மறைமலை அடிகள், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், குமாரசாமி பிள்ளை, சோமசுந்தர பாரதியார் மற்றும் இன்னும் பல தலைவர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டனர்.
போராடுபவர்களுக்கு எதிராக ஒடுக்குமுறை ஏவப்பட்டது. அண்ணா, பெரியார் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சம் பெற்றிருந்த சமயத்தில்தான் கும்பகோணத்தைச் சேர்ந்த தாளமுத்து சென்னையைச் சேர்ந்த நடராசன் ஆகியோர் போராடிய காரணத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் காவல்துறை தாக்குதலால் நோய்வாய்ப்பட்டு 1939 ஜனவரி மாதம் நடராசனும், மார்ச் மாதம் தாளமுத்துவம் உயிரிழந்தனர். பல்லாயிரம் பேர் அவர்களது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். இன்றளவும் மொழிப்போர் தியாகிகளாக தாளமுத்துவும், நடராசனும் நினைவில் கொள்ளப்படுகின்றனர். 50 ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் நினைவாக எழும்பூர் சி.எம்.டி.ஏ கட்டடத்துக்கு தாளமுத்து நடராசன் மாளிகை என பெயரிட்டார் முன்னாள் முதல்வர் கருணாநிதி.

அவர்களின் இறப்புக்கு பிறகு இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்தது. இருப்பினும் ராஜாஜி மனமாறவில்லை. இந்தி பயிற்றுவிக்கப்படும் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரித்தார். இந்த நிலையில்தான் 1939-ல் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. போரில் இந்தியாவை ஈடுபடுத்தியதைக் கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அக்டோபர் 30-ம் தேதி ராஜாஜியும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 1939-ல் போராடியவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். 1940 ஃபிப்ரவரி 21-ம் தேதி கட்டாய இந்தி கற்பிப்பதை கைவிடுவதாக இந்தியாவின் வைசராய் ஜான் எர்ஸ்கின் திரும்பப் பெற்றார். அதையடுத்து போராட்டங்கள் கைவிடப்பட்டது. அன்றைக்கு போராட்டம் முடிவுக்கு வந்தது.
ஆனால் இந்தி திணிப்பு என்னும் தீ மீண்டும் எரியத் தொடங்கியது. அந்த தீ… 1965-ல் எரிமலையாக வெடித்துச் சிதறியது.
1963 ஏப்ரல் 13, ஆட்சி மொழிகள் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி. அதுதான் எரிமலை புகைய ஆரம்பிக்க காரணமாக இருந்தது.
அது என்ன ஆட்சி மொழிகள் சட்டம்?
இந்திய அரசியல் சாசனம் 1950-ம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டபோது, 15 ஆண்டுகளுக்கு இந்தியும் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக, அதாவது மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றங்கள், சட்டங்கள், தீர்மானங்கள் இயற்றும் மொழிகளாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது 1965 ஜனவரி 26ல் இருந்து, இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக தொடரும் என்றும் அதில் கூறப்பட்டது. இதை உறுதி செய்யத்தான் இந்திய ஆட்சி மொழிகள் சட்டம் 1963 நிறைவேற்றப்பட்டது.

இதை எதிர்த்து முதல் குரல் தமிழ்நாட்டிலிருந்து வந்தது. ஆட்சி நடத்த இந்தி கட்டாயம் என்ற நிலை ஏற்படும். மத்திய அரசின் தகவல் பரிமாற்றம் எல்லாம் இந்திதான். இந்தி தெரியாதவர்களுக்கு வேலை இல்லை என்ற நிலை ஏற்படும். இந்தி தெரிந்த அதிகாரிகளை, தமிழ் மட்டுமே தெரிந்த ஆட்சியாளர்களால் எப்படி கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்? இந்தி தெரிந்தவர்கள் மட்டுமே தமிழக சட்டமன்றத்தில் ஆதிக்கம் செய்யும் நிலைமை வரும். மாநில சுய ஆட்சி பறிபோகும் என்பதால் இதை திமுக கடுமையாக எதிர்த்தது. அப்போது திமுக 50 இடங்களுடன் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக இருந்தது. இந்தி புழக்கத்தில் இல்லாத மாநிலங்களின் விருப்பம் இல்லாமல், ஆங்கிலத்தை ஆட்சி மொழியிலிருந்து அகற்ற மாட்டேன் என நேரு கொடுத்த வாக்குறுதி காற்றில் விடப்பட்டதாக கூறினார் அண்ணா.
1963 நவம்பர் 16
- அரசியலமைப்புச் சட்டத்தின் ஆட்சி மொழிகள் தொடர்பான 17வது பிரிவை எரிக்க முயன்றதாக அண்ணா, கைது செய்யப்பட்டார்.
நவம்பர் 17 1963-ல் இருந்து 1965 ஜனவரி 25 வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்தது. ரயில் மறியல், உண்ணாவிரதம், இந்தி எழுத்து அழிப்பு என தொடர் போராட்டங்கள் நடந்து வந்தன. கல்லூரி மாணவர்களின், பள்ளி மாணவர்களும் போராட்டக் களத்தில் இறங்கினர். போராட்டம் வேகம் பெற்று வந்தபோதுதான் அந்த சம்பவம் நடந்தது.
1964 ஜனவரி 25-ம் தேதி. அதாவது இந்தி மட்டும்தான் ஆட்சி மொழியாக தொடரும் என மத்திய அரசு அறிவித்திருந்த நாளுக்கு ஓராண்டுக்கு முன்பு, திருச்சியில் தீக்குளித்தார் கீழ்பழுவூர் சின்னசாமி. தமிழ் வாழ்க் இந்தி ஒழிக என்ற கோஷத்தோடு எரிந்து மாண்டார் சின்னசாமி. சின்னசாமியின் உயிர்த்தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினமாக தமிழ்நாடு அரசு கடைபிடிக்கிறது.

சின்னசாமி பற்ற வைத்த நெருப்பு, தமிழக மாணவர்களின் இதயத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது. போராட்டம் அடுத்த கட்டத்துக்கு சென்றது. மாணவர் அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அமைப்பாய் திரண்டனர். திமுக மட்டுமல்ல, பல்வேறு தமிழ் அமைப்புகளும், இடதுசாரிகளும் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். 1965 ஜனவரி 25-ம் தேதி. ஆட்சிமொழியிலிருந்து ஆங்கிலம் நீக்கப்படுவதற்கு அல்லது துணை மொழியாக பயன்படுத்த தொடங்குவதற்கு ஒரு நாளுக்கு முன்பு, அதாவது சின்னசாமியின் முதல் நினைவுநாளன்று, பேரறிஞர் அண்ணாவும் 3000 திமுகவினரும் கைது செய்யப்பட்டனர்.
மதுரை காங்கிரஸ் அலுவலகத்தில் தாக்குதல் நடந்தது. கலவரம் தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் கலவரம் பரவியது. மாணவர்கள் போராட்டத்தை கையில் எடுத்தனர். ஜனவரி 26-ம் தேதி சென்னை சிவலிங்கம் தீக்குளித்த செய்தி வந்தது. அடுத்தடுத்து தீக்குளித்தும், விஷம் குடித்தும் பலர் இறந்த செய்திகள் வந்து கொண்டே இருந்தது. அய்யாபாளையம் வீரப்பன், சத்தியமங்கல முத்து, கீரணூர் முத்து, மயிலாடுதுறை சாரங்கபாணி, விராலிமலை சண்முகம், சிவகங்கை ராஜேந்திரன், பீளமேடு தண்டபாணி, சென்னை சிவலிங்கம் விருகம்பாக்கம் அரங்கநாதன், என பலர் உயிர்த்தியாகம் செய்தனர். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மூடப்பட்டன. அப்போது தமிழக காங்கிரஸ் ஆட்சியின் முதல்வராக இருந்த பக்தவச்சலம், போராட்டத்தின் தீவிரத்தை புரிந்து கொள்ளவில்லை. போராட்டத்தை ஒடுக்குவதில் கடுமை காட்டினார். போராடியவர்கள் மீது 40 இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
5000 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 2000 பேர் 16 வயதுக்குட்பட்டவர்கள்.
5 தபால் நிலையங்கள் கொளுத்தப்பட்டன.
25 ரயில் நிலையங்கள் தாக்கப்பட்டன
10 ரயில் பெட்டிகள் கொளுத்தப்பட்டன.
5 அரசு அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்டடுன
5 காவல் நிலையங்களுக்கு தீ வைக்கப்பட்டன
2 எஸ்.ஐகள் கொல்லப்பட்டனர்.
பிப்ரவரி 10 முதல் மார்ச் 2 வரை அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.ஒரு வாரத்துக்கு அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன.
மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் புத்திர சிகாமணி தபால் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை துப்பாக்கியால் சுட்டார்.

நிலைமைய கட்டுப்படுத்த அன்று தமிழ்நாட்டிலிருந்த 33,000 போலீசோடு ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து 5000 ராணுவ வீரர்கள் இறக்கப்பட்டனர். தமிழ்நாடு முழுக்க இருந்த பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இணைந்தனர். பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். ஃபிப்ரவரி 13, 1965 மட்டும் 1028 பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் இதில் ஒரு ட்விஸ்ட் நடந்தது..!
1937-ல் இந்தியை திணித்த ராஜாஜி, 1965-ல் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்தார். தந்தை பெரியார், திமுகவின் தூண்டுதலில் மாணவர்கள் காலித்தனம் செய்வதாக கண்டித்தார். இது காங்கிரஸ் எதிர்ப்பு போராட்டம் என்றார். இந்தி திணிப்பை எதிர்த்தாலும், திமுக மீதான கோபம் பெரியாரை இப்படி பேசவைத்தது. ராஜாஜியின் சுதந்திரா கட்சியையும், திமுகவையும் தடை செய்ய வேண்டும் என்றார். ஆனால் பெரியார் நினைத்தது போல் அல்ல. மாணவர்கள் போராட்டத்தை தங்கள் கையில் எடுத்துவிட்டனர். மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படலாம் என தகவல் வந்ததால் அண்ணா மாணவர் தலைவர்களை அழைத்துப் பேசினார். “ நமது எதிர்ப்பை பதிய வைத்துவிட்டோம். போராட்டத்தை கைவிட வேண்டும்” என அண்ணா கேட்டுக் கொண்டார். ஆனால் மாணவர் தலைவர்கள் அதை ஏற்கவில்லை. போராட்டத்தை தொடர்ந்தனர். மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 25 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஊர்வலம் சென்று கைதானார், மாணவர்களை தூண்டியதாக மதுரை தியாகராயர் கல்லூரி பேராசிரியர் இலக்குவனார், நெல்லை மதிதா இந்து கல்லூரி துணை முதல்வர் அருணாசலம் உள்பட பல ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். மாணவர்களுக்கு எதிரான வன்முறை தொடர்வதையடுத்து மத்திய அமைச்சர்கள் சி.சுப்பிரமனியம், ஓ.வி.அளகேசன் பதவிய ராஜினாமா செய்தனர். ஆனால், பிரதமர் லால் பகதூர் சாஸ்த்ரி கேட்டுக் கொண்டதற்கிணங்க, ராஜினாமாவை வாபஸ் பெற்றனர். அரசியல் அழுத்தம் காரணமாக முதல்வர் பக்தவச்சலம் மாணவர் தலைவர்களை அழைத்து பேசினார். ஆங்கிலம் தொடரும் என்ற நேருவின் வாக்குறுதி காப்பாற்றப்படும் என பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி கூறியதாக தெரிவித்தார்.
1965 ஜனவர் 25 தொடங்கிய போராட்டம் 50 நாட்கள் கடந்து மார்ச் 15-ம் தேதி முடிவுக்கு வந்தது. 1968 ஆட்சி மொழிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது. ஆங்கிலமும் ஆட்சி மொழியாக தொடரும் என மத்திய அரசு மாற்றியது. அது இப்போது வரை தொடர்கிறது.. ஆனால் பிரச்னை அதோட முடியவில்லை…மொழிப்போர் கொடுத்த ஆதரவுல திமுக ஆட்சியைப் பிடித்தது. அண்ணா முதல்வரானார்.

1968-ல மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்கியது. இந்தி பேசும் மாநில மாணவர்கள் இந்தி+ ஆங்கிலம் + ஒரு மாடர்ன் இந்திய மொழி ( preferably தென் மாநில மொழி) படிக்க வேண்டும் என்றும், இந்தி பேசாத மாநிலத்தில் உள்ளூர்மொழி + ஆங்கிலம் + இந்தி படிக்க வேண்டும் என்றும் கட்டாயமாக்கப்பட்டது. அதை எதிர்த்து, தமிழக இருமொழிக் கொள்கை கடைபிடிக்கப்படும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார் அண்ணா. அதன்படி தமிழ்நாட்டில் தாய்மொழி, ஆங்கிலம் மட்டும் படித்துக் கொண்டிருக்கிறோம்.
மாநிலங்களுக்கு இடையிலான இணைப்பு மொழியாக இந்தி இருப்பதால் என்ன தவறு என கேட்டதற்கு அண்ணா சொன்னார்...
``சின்ன நாய் பெரிய நாய் என இரண்டு நாய்கள் இருக்கிறதென்றால், சின்ன நாய் செல்ல சின்ன கதவும் பெரிய நாய் செல்ல பெரிய கதவும் தனிதனியாக எதற்கு? பெரிய கதவு வழியாகவே சின்ன நாய் போக முடியுமே! இங்கே சின்ன கதவு இந்தி, பெரிய கதவு ஆங்கிலம். ஆங்கிலத்தை வைத்து இந்தியாவுக்குள்ளும் பேச முடியும், உலகத்தோடும் பேச முடியும். அதனால் நாங்கள் ஆங்கிலத்தை படித்துக் கொள்கிறோம், இந்தி தேவையில்லை” என்றார்.
அதற்காக இந்தியை யாரும் படிக்கக் கூடாது என்று தடுக்கவில்லை. விருப்பம் இருப்பவர்கள் படிக்கட்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து நீடிக்கிறது.

இதற்கு முன்பு இந்தியை நேரடியாக திணித்தனர். ஆனால் இப்போது மறைமுக திணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. எப்படி?
புதிய தேசிய கல்விக் கொள்கை மூலமாக!
2020-ல் வெளியிடப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கை மும்மொழிக் கொள்கையை கட்டாயப்படுத்துகிறது. தாய்மொழி + ஆங்கிலம் + ஏதேனும் ஒரு இந்திய மொழி படிக்க வேண்டும், ஆனால் அது இந்தியாக இருக்க அவசியமில்லை. 2020-ல் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி இருமொழிக் கொள்கையே தொடரும் என அறிவித்தார். ஆட்சி மாறியது. திமுக ஆட்சிக்கு வந்தது. புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம், தமிழ்நாட்டுக்கு தனி கல்விக் கொள்கை உருவாக்குவோம் என சொன்னார் முதல்வர் ஸ்டாலின். அதன் பிறகு 4 ஆண்டுகள் கடுந்துவிட்டன. இந்த நான்கு ஆண்டுகளும், மாநில கல்விக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி, தமிழ்நாட்டுக்கு முறையாக கொடுப்பதில்லை, தாமதப்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்தது. இப்போது மத்திய அரசு சமக்ரா சிக்ஷா திட்டம் மூலம் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.2,150 கோடியை கொடுக்க மறுக்கிறது. புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்றால்தான் நிதியை விடுவிப்போம் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் தெரிவித்தார்.

இந்தியை திணிக்கவே புதிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என மத்திய அரசு பிளாக் மெயில் செய்வதாக தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டுகிறது. அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளனர். சிபிஎஸ்சி பள்ளிகளில் இந்தி அனுமதிக்கும்போது, தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் என் மும்மொழிக் கல்வி அனுமதிக்கப்படக் கூடாது என பாஜக கேட்கிறது. மோதல் தொடர்கிறது.…
சரி மூன்றாவது மொழியாக எதுவேண்டுமானால் இருக்கலாம் என சொல்லும்போது எப்படி இந்தி திணிக்கப்படுகிறது என்ற கேள்வி வருகிறது?
அரசியல் நோக்கங்களை தவிர்த்துவிட்டு நடைமுறை சாத்தியங்களைப் பார்ப்போம்:
1. முதல் சிக்கல் ஆசிரியர் நியமனம்.
மத்திய அரசின் 8-வது அட்டவணையில் 22 மொழிகள் இருக்கின்றன. எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம் என்றால் 22 மொழிக்குமான ஆசிரியர்களை பள்ளியில் நியமிக்க முடியுமா?
முடியாது என்பதை உணர்த்தும் வகையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜுஜூ 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொடுத்த ஒரு தகவல் கூறுகிறது. மும்மொழிக் கொள்கையை பின்பற்றும் மாநிலங்களில் மற்ற மொழி ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கிறது என்கிறார். அப்படி இருக்கும்போது, எப்படி 22 மொழிகளுக்கு இவர்கள் ஆசிரியர்களை நியமிப்பார்கள்?
2. ஒரு பள்ளியில் ஒரு மாணவன் மட்டும் கன்னடம் கற்கவேண்டும் என நினைக்கிறார் என்றால், அவருக்காக ஒரு தனி ஆசிரியரை நியமிப்பார்களா? முடியாது என்றால், பள்ளி நிர்வாகம் என்ன செய்யும்? பொதுவாக ஒரு மொழியை தேர்ந்தெடுத்து அதற்கு மட்டும் ஆசிரியர்களை நியமித்து, அதைதான் நீங்கள் மூன்றாவதாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயப்படுத்தும். அந்த ஒரு மொழி பெரும்பாலும், இந்தியாகவோ, சமஸ்கிருதமாகவோதான் இருக்கும்.
3. ஏன் அந்த ஒரு மொழி வேறு ஒன்றாக இருக்கக் கூடாதா? இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் மத்திய அரசு 2019-2020 ஆண்டில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி ஆசிரியர்களை நியமிக்க ரூ50 கோடி ஒதுக்கியது. ஆனால், இந்தி பேசும் மாநிலங்களில் பிற மொழி ஆசிரியர்களை நியமிக்க நிதி ஒதுக்கவில்லை.
4. இந்தி பேசும் மாநிலங்களில் மூன்றாவது மொழியாக தமிழ் கற்றுக் கொடுக்க வாய்ப்பிருக்கிறதே?. அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று ஆசிரியர் பற்றாக்குறை. இன்னொரு விஷயம், இந்திக்கு நெருங்கியது சமஸ்கிருதம். அதை தேர்வு செய்து மார்க் எடுப்பது மாணவர்களுக்கு எளிது. அதைத்தான் தேர்வு செய்வார்கள். ஆகவே இது சமஸ்கிருதத்தையும் சேர்த்து வளர்க்கும் முயற்சியே தவிர, வட மாநிலங்களில் தமிழோ அல்லது மற்ற தென் மாநில மொழிகளோ கற்பிப்பதற்கு வாய்ப்பு குறைவு.
சரி மும்மொழிக் கொள்கை ஏன் வேண்டும் என பாஜக சொல்லும் காரணங்கள் என்ன?
1. மூன்றாவதாக ஒரு மொழி தெரிந்தால், தமிழ்நாட்டைவிட்டு வெளி மாநிலத்துக்கு பணிக்காகவோ, வர்த்தகத்துக்காகவோ செல்லும்போது அது பயனளிக்கும் என்கிறார்கள்.
சரிதான். ஒரு மாணவர், பின்னாளில் பணிக்கோ அல்லது வர்த்தகத்துக்கோ, எந்த மாநிலத்துக்கு செல்வார் என்று பள்ளியில் படிக்கும்போதே எப்படி முடிவு செய்ய முடியும்? இந்தி படித்த ஒருவருக்கு, பெங்களூரில் ஐடி வேலை கிடைத்தால், அவர் திரும்பவும் கன்னடம் கற்றுக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். தனக்கு எந்த மொழி தேவை என்றே தெரியாமல், அதைப் படிப்பது நேர விரயம்தானே? அந்த நேரத்துக்கு அந்த மாணவர் ஒரு புரோகிராமிங் லாங்குவேஜ் கற்றிருந்தால், அது அவனது வேலை வாய்ப்புக்கு உதவுமே!
2. எல்லை தாண்டினால் உணவு கேட்க மொழி தெரிந்திருக்க வேண்டும் என்கிறார்களே?
ஹோட்டலுக்கு சென்று உணவை பார்த்து, இது வேண்டும் செய்கை காட்டினால், அதை கொடுத்திவிடப் போகிறார்கள். இது ஏ.ஐ காலம், மொழி பெயர்ப்புக்கு என்று பல அப்ளிகேஷன்கள் வந்துவிட்டன. இதையெல்லாம் இந்தி படிக்க ஒரு காரணமாக சொல்கிறார்கள். சரி உணவு தெரிந்திருக்க வேண்டும் மென்றாலும் கூட, எத்தனை மாநிலங்களுக்கு செல்கிறோமோ அத்தனை மாநிலங்களின் தெரிந்து வைத்திருக்க முடியுமா என்ன?

ஆதாரப்பூர்வமாக இந்தியோ அல்லது மூன்றாவதாக ஒரு மொழி படித்தாலோ, இந்த நன்மைகளெல்லாம் இருக்கிறது என்று பாஜகவால் சொல்ல முடியவில்லை. நிர்மலா சீதாராமன் என்னை இந்தி படிக்கவிடவில்லை என்கிறார். ஆனாலும், அவர் நிதியமைச்சர் ஆகியிருக்கிறாரே? எப்படி முடிந்தது? ஆங்கிலுமும், அவர் படித்த பொருளாதாரமும் தானே காரணம்?அதைத்தான் தமிழ்நாடு இருமொழிக் கொள்கை மூலம் செய்து கொண்டிருக்கிறது. தாய்மொழி தமிழை படிக்க வேண்டும். உலகத்தோடு தொடர்பு கொண்டு முன்னேற ஆங்கிலமும், அறிவியலும் படிக்க வேண்டும் என்ற கல்விக் கொள்கையை தமிழ்நாடு வகுத்திருக்கிறது.
அதில், வெற்றியும் பெற்றிருக்கிறது. இந்தியாவிலேயே 49% உயர் கல்வி சேர்க்கை தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. 2030-ல் இந்திய உயர் கல்வி சேர்க்கையை 50% ஆக்க வேண்டும் என 2020 கல்விக் கொள்கையில்தான் மத்திய அரசு அறிவிக்கிறது. அதை செய்து முடித்துவிட்டது தமிழ்நாடு. தொழில் துறையில் 42% பெண்களின் பங்கு இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். அப்துல்கலாம் தொடங்கி, வீரமுத்துவேல் வரை தமிழில் படித்த பலர் இஸ்ரோ விஞ்ஞானிகளாகி சாதித்திருக்கின்றனர்.
இன்று இந்தியர்கள் சிலிக்கான் வேலியை ஆள்கிறார்கள். ட்ரம்ப் ஆட்சியில் இந்திய வம்சாவளியினர், தமிழர்கள் ஏகப்பட்ட பேர் இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் மூன்றாவது மொழியால் அந்த இடத்துக்கு உயரவில்லை. ஆங்கிலமும், அறிவியலும் படித்துத்தான் அங்கே சென்றிருக்கிறார்கள். இந்திய ஜிடிபியில் தமிழ்நாடு 3-ம் இடத்தில் இருக்கிறது. இதைவிட வேறு என்ன சான்றுகள் வேண்டும்.

அதற்காக மூன்றாவது மொழி படிக்க யாரும் தடை விதிக்கவில்லை. எந்த மொழி தேவையோ அந்த மொழி படித்துக் கொள்ளக் கூடாது என்று யாரும் சொல்வதில்லை.
மொழி திணிப்புக்கு பின் இருக்கும் பண்பாட்டு அரசியல்… மொழி திணிப்பு என்பது மொழி அழிப்புக்கு வித்திடும். மொழியின் அழிவு என்பது பண்பாட்டின், இன அடையாளத்தின் அழிவு. அந்த அழிவு உலகின் மூத்த மொழி தமிழுக்கு ஏற்படக் கூடாது என்பதுதான் மொழியியல் அறிஞர்களின் வாதம். இந்தியால் இந்தியாவில் 80 மொழிகள் காணாமல் போயிருக்கின்றன என ஆதாரப்பூர்வமாக கூறுகிறார், மொழி சமத்துவத்துகாக குரல் கொடுத்துவரும் செயற்பாட்டாளர் ஆழி செந்தில்நாதன். இன்று கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் இந்தி ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது. சினிமா பாடல்களைக் கூட இந்திதான் ஆக்கிரமித்திருக்கிறது. இந்தி வேண்டாம் என அந்த மாநில பாஜக தலைவர்களே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இது மொழியை படிப்பது பற்றிய பிரச்னையல்ல. அதிகாரத் திணிப்பு பற்றிய பிரச்னை. அதிகார திணிப்பு எந்த வகையில் வந்தாலும், அது மக்களுக்கு எதிரானதுதான். இதையெல்லாம் தாண்டி, மும்மொழிக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கையை மறுக்க தமிழ்நாட்டுக்கு உரிமை இருக்கிறது. ஏனென்றால் கல்வி பொதுப் பட்டியலில் இருக்கிறது. மத்திய அரசும், மாநில அரசும் கலந்தாலோசித்துதான் அதில் முடிவெடுக்க வேண்டும். மத்திய அரசு ஒரு முடிவை எடுத்துவிட்டு அதை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது. அப்படி ஏற்கவில்லை என்றால் கல்விக்கான நிதியை கொடுக்க முடியாது என்று சொல்பவர்கள், தமிழக மாணவர்கள் மீது அக்கறை கொண்டிருப்பதாக பேசுவதை நாம் சந்தேகிக்க வேண்டியதாக இருக்கிறது.

ஆங்கிலத்தை தொழில் சார்ந்த மொழியாக பயன்படுத்துவதால், தமிழ் மொழி வளமை மாணவர்களுக்கு குறைந்திருப்பதாக இன்னொரு பார்வையும் இருக்கிறது. ஆனால் தமிழர்கள் கடல் கடந்து வணிகம் செய்தவர்கள். வணிகம், வேலை காரணங்களுக்கு ஆங்கிலம் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. இதில், அவசியமில்லாமல் மூன்றாவதாக ஒரு மொழியை சேர்த்தால், மக்களுக்கும் தமிழ் மொழிக்குமான இடைவெளி அதிகமாகத்தான் செய்யும். மொழியோடு இடைவெளி அதிகரித்தால் பண்பாட்டோடும் இடைவெளி அதிகரிக்கும். 5,000 ஆண்டுகளுக்கு முந்தையது, தமிழ் பண்பாடு என தொல்லியல் ஆய்வுகள் மூலம் நிரூபித்து வருகிறோம். அந்த பண்பாட்டை கட்டிக் காத்து நம்மிடம் கொடுத்து வருவது நம் தாய்மொழி தமிழ். அதை வளர்ப்பதற்கான நேரமிதுவே தவிர, எந்தவித தேவையுமின்றி மூன்றாவதாக ஒரு மொழியை கட்டாயப்படுத்துவது, தமிழ் பண்பாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதலே!
கல்வியில் அரசியல் வேண்டாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், கல்வியும் ஒரு அரசியலே. அந்த அரசியலால்தான் நமக்கு கல்வி கிடைத்தது என்பதே வரலாறு! வரலாற்றிலிருந்து பாடம் கற்போம்!