நியூசி.க்கு எதிரான போட்டியில் முகமது ஷமிக்கு பதில் அர்ஷ்தீப் சிங் விளையாடுகிறாரா...
USA - Ukraine : 'ஜெலன்ஸ்கி vs ட்ரம்ப்' - 10 நிமிடத்தில் பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாற 4 காரணங்கள்!
உக்ரைனின் கனிமவளங்களை அமெரிக்கா எடுத்துக்கொள்ளும்படியான ஒரு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாகவிருந்தது. இதற்காக அமெரிக்கா சென்றார் ஜெலன்ஸ்கி. நேற்று அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப், துணை அதிபர் ஜேடி வான்ஸ், அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது வெடித்த வார்த்தைப் போர் வாக்குவாதத்தில் முடிந்திருக்கிறது. இறுதியில் ஒப்பந்தம் கையெழுத்தாகமலே பாதியிலேயே முடிவுக்கு வந்தது அந்த சந்திப்பு. இந்த சந்திப்பில் வாக்குவாததை தூண்டிய 4 தகவல்களையும் அதன் பின்னணியையும் பார்க்கலாம்.
வழக்கமான சந்திப்பாக தொடங்கிய இந்த சந்திப்பின் முதல் 30 நிமிடங்கள் முடிந்ததற்குப் பிறகு ஜேடி வான்ஸ் உக்ரைன் போர் முடிவு குறித்து,``ஒரு நாட்டின் அமைதிக்கான, முன்னேற்றத்துக்கான வாய்ப்பு ராஜாதந்திரத்தில்தான் இருக்கிறது. ட்ரம்ப் அதைத்தான் செய்கிறார்" என்றார். அப்போதுதான் இந்த பேச்சுவார்த்தை விவாதக் களத்தை நோக்கி நகரத் தொடங்கியது.
பலமுறை, தொடங்கி தோல்வியுற்ற போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு, தாக்குதல், உக்ரைனுக்கு அமெரிக்காவின் தொடர் ஆயுத சப்ளை, போர் ஆதரவு என இந்தப் போருக்கான அனைத்து சூழலும் வளர்க்கப்பட்டு வந்ததை உலகமே பார்த்தது. இதைக் கேள்வி எழுப்பும் விதமாகதான் ஜெலன்ஸ்கி குறுக்கிட்டு,``ஜே.டி., நீங்கள் என்ன வகையான ராஜதந்திரத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள்? நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?" என்றார். இந்த கேள்வியின் ஆழம் வெளிப்படையாக பதட்டமான சூழலை உருவாக்கியது. இதற்கு நேரடியாக பதிலளித்த வான்ஸ், ``உங்கள் நாட்டின் அழிவை முடிவுக்குக் கொண்டுவரும் வகையிலான ராஜதந்திரம்" என்றார்.

ராணுவ ஆதரவு உள்ளிட்டப் பல்வேறு விஷயங்களில் இருக்கும் சவால்கள் குறித்து வான்ஸ் பேசியபோது, உக்ரைனிய அதிபர் ஜெலன்ஸ்கி,``போரின் போது, அனைவருக்கும் பிரச்னைகள் வரும். உங்கள் நாட்டுக்கும் வரும். ஆனால் இப்போது அதை உணரமாட்டீர்கள். ஆனால் எதிர்காலத்தில் நீங்கள் அதை உணருவீர்கள்." என்றார். இது ட்ரம்புக்கு மிகப்பெரிய அவமரியாதையாக தோன்றியிருக்கலாம். அதனால் ஆத்திரமடைந்த அவர் குரலை உயர்த்தி "நாங்கள் என்ன உணரப் போகிறோம் என்று எங்களிடம் நீங்கள் சொல்லாதீர்கள். அதைச் சொல்லும் நிலையில் நீங்கள் இல்லை," என்றார். அதிலிருந்துதான் ட்ரம்ப் தொடர்ந்து பேசத் தொடங்கினார்.
உரையாடலின் ஒரு கட்டத்தில், ஜெலன்ஸ்கி, ``இந்தப் போரின் தொடக்கத்திலிருந்தே, நாங்கள் தனியாக இருந்தோம். அதே நேரம் எங்களுக்கு உதவியவர்களுக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்." என்றார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த ட்ரம்ப் விடாமல் தொடர்ந்து பேசியதில், ``நீங்கள் தனியாக இல்லை... நீங்கள் தனியாக விடப்படவுமில்லை. இந்த நாட்டின் முன்னாள் முட்டாள் அதிபர் மூலம் நாங்கள் உங்களுக்கு - 350 பில்லியன் டாலர்களை வழங்கினோம்." என்றார்.

கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின் போது கமலா ஹாரிஸ்காக ஜெலன்ஸ்கி பிரசாரம் செய்ததாக குற்றச்சாட்டு இருக்கிறது. தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு, ஜோ பைடனின் சொந்த ஊரான பென்சில்வேனியாவின் ஸ்க்ராண்டனில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு ஜெலன்ஸ்கி சென்றிருந்தார். இது ட்ரம்ப் கட்சியான குடியரசுக் கட்சியினரை ஆத்திரப்படுத்தியது.
இடையில் ஜேடி வான்ஸை பார்த்து பேசிய ஜெலன்ஸ்கி, ``மிகவும் சத்தமாகப் பேசாதீர்கள்..." என சொல்லத் தொடங்கியபோது, ட்ரம்ப் ``அவர் சத்தமாகப் பேசவில்லை...உங்கள் நாடு பெரிய சிக்கலில் உள்ளது." என்றார்.
இந்த விவாதத்தின்பொது ட்ரம்ப், ``இது போன்ற மனநிலையில் இருநாடுகளுக்கு மத்தியில் வணிகம் செய்வது மிகவும் கடினம்" என ஒப்பந்தம் செய்துகொள்ளும் முடிவை மாற்றியது குறித்து தெரிவித்தார். அமெரிக்காவின் உதவிக்கு எப்போதும் நன்றி கூறுங்கள் என்றார் வான்ஸ். அதனால் கனிம வள ஒப்பந்தம் நிறைவேறாமல் நிறுத்தப்பட்டது. 'அமைதி பேச்சுவார்த்தையில் ஜெலன்ஸ்கிக்கு உடன்பாடு இல்லை' எனப் பல்வேறு வழிகளில் ட்ரம்ப் நிறுவிக் கொண்டே இருந்தார். முதல் 30 நிமிடங்களுக்கு பின்னர் பேச்சுவார்த்தை இப்படி தான் கொஞ்சம் கொஞ்சமாக வாக்குவாதமாக மாறியது.
இறுதியில் வெள்ளைமளிகையை விட்டு ஜெலன்ஸ்கி வெளியேறியாதற்குப் பிறகும், ``அமைதியை ஏற்படுத்தும் மனநிலை ஏற்பட்டால் மட்டும் மீண்டும் வாருங்கள்" எனக் குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.
மறுபக்கம் ஜெலன்ஸ்கி, இந்த விவகாரத்தில் தங்களுக்கு ஆதரவு தெரிவித்துவரும் உலக நாடுகளுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
