Tamannaah: கிரிப்டோகரன்சி மோசடி வழக்கு; தமன்னாவிற்குத் தொடர்பா? விசாரிக்க புதுச்...
சிறுமலை: புதருக்குள் ஆண் சடலம்; அருகே கிடந்த பொருள் வெடித்ததில் போலீஸார் காயம்; நடந்தது என்ன?
திண்டுக்கல் மாவட்டத்தின் குட்டிக்கொடைக்கானல் என்றழைக்கப்படும் சிறுமலையில் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதில் 17 ஆவது கொண்டை ஊசி வளைவில் உள்ள வாட்ச்சிங் டவர் அருகே காட்டுப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. அப்பகுதியில் சடலம் கிடக்கலாம் எனச் சந்தேகித்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த திண்டுக்கல் தாலுகா போலீஸார் மற்றும் வனத்துறையினர் அப்பகுதியில் சோதனையிட்டனர்.

அப்போது புதருக்குள் ஒரு ஆண் சடலம் கிடந்தது. அருகே பேட்டரி, ஒயர்கள், வெடி மருந்து கிடந்துள்ளன. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. ஆனால் அதன் மூலம் துப்பு கிடைக்கவில்லை. அந்த ஆண் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காகத் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர். சடலத்தைத் தூக்க முயன்றபோது, அருகே கிடந்த பொருள் திடீரென வெடித்தது.
இதில் போலீஸார் கார்த்தி, மணி, வனத்துறையினர் செல்வ ஆரோக்கியராஜ் ஆகியோர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் போலீஸார் சோதனை நடத்தினர். இதையடுத்து அந்த ஆண் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

சிறுமலை பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாகத் தகவல் பரவி வந்தன. இந்நிலையில் ஒருவர் உயிரிழந்த கிடக்க அவர் அருகே பேட்டரி, வெடிமருந்து கிடந்தது, மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது எனச் சிறுமலை மக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸார், "முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த நபர் கேரளாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் உயிரிழந்து கிட்டப் பகுதி தனிநபரின் பட்டா நிலம். வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வெடிமருந்து கொண்டுவரப்பட்டதா என்ற கோணத்தில்தான் விசாரித்து வருகிறோம்" என்றனர்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel