புனே பாலியல் கொடூரம்: கரும்பு தோட்டத்தில் மறைந்திருந்த குற்றவாளி; மோப்ப நாய், ட்ரோன் உதவியுடன் கைது!
புனே ஸ்வர்கேட் பகுதியில் இருக்கும் அரசு பேருந்து நிலையத்தில், பேருந்துக்காகக் காத்திருந்த பெண் தனியாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதிகாலையில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சம்பவம் நடந்த பேருந்து நிலையத்தை அடித்து உடைத்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறான தகவலை சொல்லி ஒதுக்குப்புறமாக நிறுத்தப்பட்டு இருந்த பேருந்துக்குள் அழைத்துச் சென்று குற்றவாளி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார். இக்காரியத்தில் ஈடுபட்ட நபரைக் கைதுசெய்ய போலீஸார் 13 தனிப்படைகளை அமைத்தனர். இப்படைகள் மாநிலம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டது. காவல் நிலையத்திற்கு எதிரில் நடந்த இச்சம்பவம் பெண்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து குற்றவாளியை உடனே கைதுசெய்ய, அவனைப் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று போலீஸார் அறிவித்தனர்.

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபரின் பெயர் தத்தாத்ரேயா ராம்தாஸ் காலே என்று தெரிய வந்தது. அந்த நபர் மீது ஏற்கெனவே திருட்டு, செயின் பறிப்பு என 6-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. இதற்காக கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருந்தார். தத்தாத்ரேயா புனே மாவட்டத்தில் உள்ள ஷிரூர் தாலுகாவில் இருக்கும் கிராமத்தில் கரும்பு தோட்டத்திற்குள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இரவில் அக்கரும்பு தோட்டத்தை போலீஸார் சுற்றி வளைத்தனர். மோப்ப நாய்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கரும்பு தோட்டத்திற்குள் தத்தாத்ரேயாவை போலீஸார் தேடினர். நள்ளிரவில் போலீஸாரிடம் தத்தாத்ரேயா சிக்கினார். அவரைக் கைதுசெய்து புனே கொண்டு வந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்பு நடிகர் சைஃப் அலிகானை வீடு புகுந்து தாக்கிய நபரும் மும்பை அருகே நள்ளிரவில்தான் கைதுசெய்யப்பட்டார்.