பெங்களூரு விமான நிலையத்தில் காவலரை தாக்கிய வெளிநாட்டவர் கைது!
பெங்களூரு விமான நிலையத்தில் மத்திய தொழில்படையைச் சேர்ந்த வீரரை தாக்கிய வெளிநாட்டுப் பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.
பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், அவரை விமானத்தில் செல்ல பாதுகாப்புப் படையினர் அனுமதிக்கவில்லை.
இதையும் படிக்க : தில்லி: ஐசியு, பிணவறை இல்லாத மருத்துவமனைகள்!
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு பகுதிக்கு வியாழக்கிழமை இரவு 10.20 மணியளவில் எலியட் பிளேர் என்ற வெளிநாட்டுப் பயணி வந்துள்ளார்.
அவரிடம் ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாட்டின் கடவுச் சீட்டுகள் இருந்துள்ளன. அவரின் பேக்கை அப்பகுதியில் பணியமர்த்தப்பட்டிருந்த மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை காவலர் ராம்குமார் தலேரா சோதனை செய்ய முயற்சித்துள்ளார்.
அப்போது, கோபமடைந்த பிளேர், காவலர் ராம்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அவரை மற்ற காவலர்கள் சமாதானப்படுத்த முயற்சித்த நிலையில், அவர்களையும் திட்டியுள்ளார்.
மேலும், வரிசையில் நின்றுகொண்டிருந்த பெண்கள் உள்ளிட்ட பயணிகள், காவலர்களை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, விமான நிலைய காவல் நிலையத்துக்கு பிளேரை அழைத்துச் சென்ற பாதுகாப்புப் படை வீரர்கள், அவர் மீது பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும், அவருக்கு விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.