சென்னை: ஆன்லைன் ஆர்டர்; டெலிவரி பாய் செயலால் அதிர்ச்சியடைந்த பெண் - நடந்தது என்ன?
சென்னை கோட்டூர்புரம் பகுதியில் வசிக்கும் 54 வயதுடைய பெண் ஒருவர், அவரின் வீட்டில் குளித்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த பொருளை டெலிவரி செய்ய இளைஞர் ஒருவர் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு வந்திருக்கிறார். வீட்டின் கதவை தட்டியும் யாரும் கதவை திறக்கவில்லை. அதனால் வீட்டை சுற்றிப்பார்த்தபோது பெண் ஒருவர், குளித்துக் கொண்டிருப்பதை ஜன்னல் வழியாக பார்த்திருக்கிறார் அந்த இளைஞர். உடனே சபலமடைந்த அவர், தன்னுடைய செல்போனில் அதை வீடியோவாக எடுத்திருக்கிறார். இந்தச் சமயத்தில் தான் குளிப்பதை இளைஞர் வீடியோ எடுப்பதைக் கவனித்த பெண், சத்தம் போட்டிருக்கறார். உடனே அந்த இளைஞர், தான் டெலிவரி செய்ய வந்த பொருளை அங்கேயே விட்டுவிட்டு தன்னுடைய பைக்கில் தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து அந்தப் பெண் தரப்பில் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி டெலிவரி செய்ய வந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் சதீஷ்குமார் எனத் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவரின் செல்போனை போலீஸார் ஆய்வு செய்தபோது அதில் பெண், குளிக்கும் வீடியோ பதிவாகியிருந்தது. இதையடுத்து சதீஷ்குமார் (36) மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரின் செல்போன், பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். சதீஷ்குமார், வேளச்சேரியில் குடியிருந்து வருகிறார். விசாரணைக்குப்பிறகு அவரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
