திருவெண்ணைநல்லூர்: டிராக்டர் மீது மோதிய எக்ஸ்பிரஸ் ரயில்... பரபரப்பை ஏற்படுத்திய நபர்!
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூருக்கு உட்பட்டது ஆணைவாரி ரயில் போக்குவரத்து நிலையம். இங்கு ஆணைவாரி மற்றும் ஆத்திப்பட்டு ஆகிய கிராமங்களை இணைக்கும் ரயில்வே கேட் அமைந்துள்ளது. கடலூர் டு சித்தூர் சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டதால் இந்த ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது மேலும் தடுப்பணைகள் அமைத்து, வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் அதிகரித்து வந்த பனிப்பொழிவால் தற்காலிகமாக தடுப்பணைகள் அகற்றி வைக்கப்பட்டன. அதனை தனக்கு சாதனமாக பயன்படுத்திக் கொண்ட கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள ஈஸ்வரகண்டநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (வயது 35) என்பவர், பிப்ரவரி 24ஆம் தேதி மாலை 4 மணி அளவில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட பகுதியில், வைக்கோல் ஏற்றுவதற்காக டிராக்டருடன் ஊர் மக்களின் எதிர்ப்பையும் எறி தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.

துரதிஷ்டவசமாக டிராக்டர் தண்டவாளத்தின் நடுவே சிக்கிக் கொண்டதால், அந்த நேரத்தில் நாகர்கோவிலில் இருந்து மும்பை நோக்கி வந்த விரைவு ரயில் டிராக்டரின் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. ரயில் வருவதனை பார்த்து டிராக்டரின் ஓட்டுநர் வாகனத்தை விட்டு தப்பி ஓடினார்.
ரயில் வந்து இடித்த வேகத்தில் டிராக்டர் ஆகாயத்தில் வீசப்பட்டதுடன் ரயிலின் முன் பாகமும் மிகவும் சேதமடைந்தது. உடனடியாக சாமர்த்தியமாக செயல்பட்ட ரயில்வே ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது .ஆனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில் பயணிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமான சூழ்நிலையும் நிலவியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருதாச்சலம் காவல்துறையினர் மற்றும் விழுப்புரம் ரயில்வே பாதுகாப்பு துறையினர் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரனை நடத்தினர். மேலும் ரயில்வே பொறியாளர்கள் ரயிலை பரிசோதித்து பார்த்த பின் ரயில் ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமாகச் சென்றது. இதனால் இதை தொடர்ந்து வந்த வந்தே பாரத் ரயில், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ,குருவாயூர் எக்ஸ்பிரஸ், ஆகிய ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தது. இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். மேலும் டிராக்டரை ஓட்டி வந்து தப்பி ஓடிய, சக்திவேலை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த தடுப்பு சுவரினை சரி செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.