கோவையில் அமித் ஷா! பாஜகவினர் உற்சாக வரவேற்பு; காங். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!
போப் பிரான்சிஸுக்கு தீவிர சிகிச்சை: இப்போது எப்படி இருக்கிறார்?
ரோம் : போப் பிரான்சிஸ் உடல்நிலை குறித்து வாடிகன் தகவல் தெரிவித்துள்ளது.
போப் பிரான்சிஸ்(88) முச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த பிப். 14-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
முதலில் மருத்துவமனைக்குச் செல்ல தயக்கம் காட்டிய போப் பிரான்சிஸ், மருத்துவர்களின் கட்டாயத்தின்பேரில் அதன்பின் மருத்துவனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அவருக்கு ஆண்டிபயோடிக் மருந்துகள் அளிக்கப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
போப் பிரான்சிஸ் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் திங்கள்கிழமை(பிப். 24) இரவு கூறுகையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளில் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் எனினும், அவர் தொடர்ந்து தீவிர பாதிப்பில் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக, தொடர் மருத்துவ கண்காணிப்பில் அவர் இருப்பது அவசியமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இரவு முழுவதும் நன்றாக தூங்கி ஓய்வெடுத்ததாகவும் மருத்துவமனை அறையில் இருந்தபடியே தமது தேவாலய பணிகளை மேற்கொண்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, காஸாவில் உள்ள திருக்குடும்ப தேவாலயத்தை தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு பேசியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, போப் பிரான்சிஸ் குணமடைய வேண்டி வாடிகன் சதுக்கத்தில் திங்கள்கிழமை(பிப். 24) மாலை திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் கடுங்குளிரையும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இரவில் பிரார்த்தனை மேற்கொண்டனர்.