Champions Trophy: ஒரே மைதானத்தில் போட்டிகள்; இந்தியாவுக்கு மட்டும் கூடுதல் அட்வான்டேஜ் - உண்மை என்ன?
சாம்பியன்ஸ் டிராபி
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானிலும் துபாயிலும் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா ஆடும் போட்டிகள் மட்டுமே துபாயில் ஒரே மைதானத்தில் நடந்து வருகிறது. மற்ற அணிகள் பாகிஸ்தானில் மூன்று வெவ்வேறான மைதானங்களில் ஆடி வருகின்றன. இந்நிலையில், இந்திய அணி ஒரே மைதானத்தில் அத்தனை போட்டிகளிலும் ஆடுவதால் மற்ற அணிகளை விட இந்தியாவுக்கு மட்டும் கூடுதல் அட்வாண்டேஜ் கிடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது நியாயமான குற்றச்சாட்டுதானா?

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இந்தத் தொடரில் ஆடவில்லை. ஆனால், அவரும் இந்தியா மீது இந்தக் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். அதேமாதிரி, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் மைக்கேல் ஆதர்டன், நாஸிர் ஹூசைன் போன்றோரும் இதே குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றனர்.
இந்தக் குற்றச்சாட்டில் நியாயம் இருக்கிறதா என்றால் நிச்சயமாக இருக்கிறது. ஏனெனில், பாகிஸ்தானில் லாகூர், ராவல்பிண்டி, கராச்சி என மூன்று மைதானங்களில் போட்டிகள் நடக்கிறது. இந்தியாவை தவிர மற்ற அத்தனை அணிகளும் இந்த மூன்று மைதானங்களிலும் மாற்றி மாற்றி ஆடுகின்றன. அதேமாதிரி, இந்தியாவின் க்ரூப்பில் இருக்கும் மற்ற அணிகளான நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் போன்றவை இந்தியாவுக்கு எதிரான போட்டியை ஆட துபாய்க்கு வர வேண்டும். துபாயில் போட்டியை முடித்துவிட்டு மீண்டும் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும்.
ஆனால், இந்திய அணிக்கு இப்படி எந்த அலைச்சலும் கிடையாது. இந்த சாம்பியன்ஸ் டிராபி முழுவதையும் இந்திய துபாய் மைதானத்தில் மட்டுமே ஆடுகிறது. லீக் போட்டிகள் மட்டுமில்லை. இந்திய அணி அரையிறுதிக்கோ இறுதிக்கோ தகுதிப்பெற்றால் அந்தப் போட்டிகளும் துபாய் மைதானத்தில் மட்டுமே நடக்கும். வேறு வேறு மைதானங்களுக்கு மாறும்போது அதற்கேற்ப யுக்திகளை மாற்ற வேண்டும். அணியின் காம்பீனேஷனை மாற்ற வேண்டும். ஆனால், இந்தியாவுக்கு அப்படி எந்த சிரமமும் தேவையில்லை.

கடைசி வரை துபாயில் மட்டுமே ஆடப்போகிறோம் என்பதால் அதற்கேற்ப யுக்திகளை வகுத்தால் போதும். இதைத்தான் இந்திய அணிக்கு கிடைக்கும் கூடுதல் அட்வாண்டேஜ் என மற்ற அணியினரும் முன்னாள் வீரர்களும் விமர்சிக்கின்றனர்.
குறிப்பிட்ட ஒரு தொடரில் சில அணிகள் மோதும் போது அத்தனை அணிகளுக்குமான சமதளத்திலான வாய்ப்புகளை உண்டாக்கிக் கொடுக்க வேண்டும். அதுதான் அறம். ஆனால், ஐ.சி.சி தொடர்ச்சியாக இந்த விஷயத்தில் சறுக்கி வருகிறது என்பதே உண்மை.
கடந்த டி20 உலகக்கோப்பையின் போதும் மற்ற அணிகள் ஒவ்வொரு போட்டியையும் வேறு வேறு மைதானங்களில் ஆட, இந்தியா மட்டும் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளை நியூயார்க்கிலேயே ஆடியிருக்கும். அதேமாதிரி, இந்தியாவுக்கு மட்டும் அரையிறுதியை எந்த மைதானத்தில் ஆடப் போகிறோம் என்பது தொடருக்கு முன்பே தெரிந்திருக்கும். இலங்கை போன்ற அணிகள் இந்தியாவுக்கு கிடைத்த இந்த அட்வாண்டேஜ்களை வெளிப்படையாகவே எதிர்த்து விமர்சனம் செய்தனர்.
2023 ஆம் ஆண்டில் ஆசியக்கோப்பையின் போது இந்திய அணி மட்டும் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாதபடிக்கு கோக்கு மாக்காக ஒரு போட்டி அட்டவணை வெளியிடப்பட்டிருக்கும். அதிலும் இந்தியாவுக்கு மட்டும் அத்தனை சௌகரியங்கள்.

இப்படி தொடர்ச்சியாகவே ஐ.சி.சி இந்தியாவுக்கு சாதகமாகத்தான் செயல்பட்டு வருகிறது. இதற்கு பொருளாதாரரீதியான காரணங்களை முன் வைப்பார்கள். அதில் நியாயம் இல்லாமல் இல்லை. பிசிசிஐதான் ஐ.சி.சிக்கு பெரியளவில் பொருள் ஈட்டி கொடுக்கிறது. ஆனால், அதற்காக ஒரு போட்டியில் Level Playing யே இல்லாமல் இருப்பதையும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஐ.சி.சி கொஞ்சம் அறத்தின் அடிப்படையிலும் யோசிக்க வேண்டும்.
ஐஐசி நடத்தும் தொடர்களில் அனைத்து அணிகளுக்கும் சமமான வாய்ப்புகள் மறுக்கப்படும் எனில், காலப்போக்கில் ரசிகர்களின் வரவேற்பை அத்தகைய தொடர்கள் இழக்க தொடங்கும் அபாயமும் உள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
