AusvAfg: 'மீண்டும் அசத்திய ஒமர்சாய்; ஆஸிக்கு நிர்ணயிக்கப்பட்ட டார்கெட்’ - வரலாறு படைக்குமா ஆப்கன்?
சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான முக்கியமான போட்டி நடந்து வருகிறது. லாகூரில் நடந்து வரும் இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து ரன்களை எடுத்திருக்கிறது. கடந்த போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் அஸ்மத்துல்லா ஒமர்சாய் மிகச்சிறப்பாக ஆடிக் கொடுத்திருக்கிறார்.

ஆப்கானிஸ்தான் அணி கடந்த போட்டியில் இங்கிலாந்து அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. அந்த அசத்தலான வெற்றியின் மூலம் அரையிறுதி வாய்ப்பையும் தக்க வைத்திருந்தது. அப்போது, 'இன்று ஒரே இரவு கொண்டாடிவிட்டு நாளை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்குத் தயாராவோம்' என அந்த அணியின் பயிற்சியாளர் ஜோனாதான் டிராட் உத்வேகம் அளிக்கும் வகையில் பேசியிருந்தார்.
இந்நிலையில், வலுவான ஆஸிக்கு எதிரான இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. 'பிட்ச் போக போக மெதுவாகும், நாங்கள் நல்ல ஸ்கோரை எடுத்தால் ஸ்பின்னர்களுக்குப் போட்டியில் தாக்கத்தை உண்டாக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்' என ஆப்கன் கேப்டன் ஷாகிதி பேசியிருந்தார்.
ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தொடங்கியது. ஆரம்பமே அதிர்ச்சி. முதல் ஓவரிலேயே குர்பாஸ் அவுட் ஆனார். ஸ்பென்சர் வீசிய அந்த ஓவரில் 140 கி.மீ க்கு மேல் வந்த யார்க்கரில் ஸ்டம்பை பறிகொடுத்து குர்பாஸ் டக் அவுட் ஆனார். ஆனால், அடுத்த விக்கெட்டுக்கு ஷத்ரானும் அடலும் நல்ல பார்டனர்ஷிப்பை அமைத்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த கூட்டணி 70 ரன்களை சேர்த்தது. அடல் தொடக்கத்தில் 25 பந்துகளுக்கு 6 ரன்கள் அடித்திருந்தாலும், பின்னர் ஏதுவான பந்துகளில் பவுண்டரி அடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில், ஷத்ரான் ஷம்பாவின் பந்தில் 22 ரன்களில் அவுட் ஆனார். அடல் ஒரு முனையில் நின்று ஆடினாலும் இன்னொரு முனையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. மேக்ஸ்வெல்லின் பந்தில் ரஹ்மத்தும் ஷம்பாவின் பந்தில் ஷாகிதியும் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். அடல் நின்று ஆடியதில் ரன்னும் கொஞ்சம் சீராக வந்துகொண்டிருந்தது. ஆனால் அவரும் சதத்தை நெருங்கி 85 ரன்களில் ஸ்பென்சரின் பந்தில் அவுட் ஆகினார். 182 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து ஆப்கானிஸ்தான் திணறியது. இந்த சமயத்தில் அஸ்மதுல்லா ஒமர்சாய் கடந்த போட்டியைப் போல அட்டகாசமான ஆட்டத்தை ஆடினார்.
இங்கிலாந்துக்கு எதிராக 31 பந்துகளில் 41 ரன்களை அடித்தவர், இங்கே 63 பந்துகளில் 67 ரன்களை அடித்திருந்தார். டெத் ஓவர்களில் அத்தனை சிறப்பாக ஆடினார். 5 சிக்சர்களை அடித்திருந்தார். பெரும்பாலான சிக்சர்கள் பெரிய சிக்சர்கள். கூடவே ஒரு பவுண்டரியையும் அடித்திருந்தார். வார்சூயிஸ் வீசிய கடைசி ஓவரில் ஒரு பெரிய ஷாட்டுக்கு முயன்று அவுட் ஆனார். ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 273 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

கடந்த ஓடிஐ உலகக்கோப்பையிலேயே ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை ஏறக்குறைய வீழ்த்தியிருந்தது. மேக்ஸ்வெல் ஒன் மேன் ஷோ இன்னிங்ஸ் ஆடி ஆப்கானிஸ்தானை வீழ்த்தினார். ஓடிஐயில் அப்போது விட்டதை ஆப்கன் இப்போது சாதிக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel