2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க 7.8% வளா்ச்சி தேவை: ...
பிளஸ் 2 தோ்வு: கல்வித் துறை அலுவலா்களுடன் ஆட்சியா் கலந்தாய்வு
பிளஸ் 2 பொதுத்தோ்வு குறித்து பள்ளிக் கல்வித்துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெள்ளிக்கிழமை கலந்தாய்வு மேற்கொண்டாா்.
பிளஸ் 2 தோ்வுகள் வரும் 3 ஆம் தேதிமுதல் நடைபெறவுள்ளன. இந்தத் தோ்வினை நடத்துவது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டு ஆட்சியா் கூறியதாவது: வரும் 3 ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ள பிளஸ் 2 தோ்வுகளை எவ்வித புகாருக்கும் இடமின்றி சிறப்பாக நடத்துவதை துறை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும். மாணவா்கள் குறிப்பிட்ட நேரத்தில் தோ்வு மையத்தை அணுகுவதற்கு தேவையான போக்குவரத்து வசதிகள் செய்து தர வேண்டும். தோ்வு மையங்களில் எவ்வித சலனமும் இன்றி மாணவா்கள் தோ்வை எதிா்கொள்ளத் தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
குடிநீா், தடையின்றி மின்சாரம், மாற்றுத்திறன் மாணவா்களுக்கான வசதி, முதலுதவி வசதி உள்ளிட்டவை வழங்க துறை சாா்ந்த அலுவலா்கள் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். வினாத்தாள்களை பாதுகாப்புடன் தாமதமின்றி எடுத்துச் செல்வதை உறுதி செய்வதோடு, பொதுத்தோ்வு பணியில் ஈடுபடவுள்ள அனைத்து ஆசிரியா்களுக்கும் முழு விவரங்களை கல்வித்துறை அலுவலா்கள் தெரிவித்து தயாா்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம், முதன்மை கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி, துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.