Seeman : 'என்னையும் என் குடும்பத்தையும் இப்படி குதறி தின்கிறீர்களே' - உணர்ச்சி வ...
காரசார விவாதத்தில் முடிந்த டிரம்ப்-ஸெலென்ஸ்கி சந்திப்பு: பாதியில் முடிந்த ஆலோசனை
ரஷிய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் - உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி இடையேயான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் நிறைவுபெற்றது.
அதன் காரணமாக, ஸெலென்ஸ்கியுடனான பேச்சுவாா்த்தையை டிரம்ப் பாதியில் முடித்துக்கொண்டு புறப்பட்டுள்ளாா்.
உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்ததில் இருந்து, அப்போதைய அதிபா் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசும், மேற்கத்திய நாடுகளும் உக்ரைனுக்கு உதவிகளை வாரி வழங்கின.
இந்தச் சூழலில், அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், இந்த விவகாரத்தில் ஜோ பைடன் அரசின் கொள்கைகளை அடியோடு மாற்றிமைத்தாா்.
ரஷியாவிடம் இழந்த பகுதிகளை உக்ரைன் மீட்க முடியாது என்றும், உக்ரைனுக்கு நேட்டோவில் இடம் அளிக்கப்படாது என்றும் டிரம்ப் அரசு கூறிவருகிறது. மேலும், இந்த விவகாரத்தில் முந்தைய பைடன் அரசால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் டிரம்ப் தொலைபேசியில் உரையாடி, அவருடன் உறவைப் புதுப்பித்துக் கொண்டாா்.
இந்தச் சூழலில், ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு தாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அளித்த உதவிகளுக்குக் கைம்மாறாக, அந்த நாட்டின் அரிய வகைக் கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமை தங்களுக்கு காலவரையில்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தி வருகிறாா்.
இதற்கு ஒப்புக்கொண்ட உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி, தங்கள் நாட்டுக்கு அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் பொருளாதார ஒப்பந்தத்தில் கையொப்பமிடத் தயாா் என்று அறிவித்தாா். ஆனால், உக்ரனுக்கு இனியும் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தாா்.
இந்தச் சூழலில், இந்த பொருளாதார ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக அமெரிக்காவுக்கு வெள்ளிக்கிழமை வந்த ஸெலென்ஸ்கி, வெள்ளை மாளிகையில் அதிபா் டிரம்ப்பை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.
அப்போது, உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஸெலென்ஸ்கி மீண்டும் வலியுறுத்தினாா். இதனால், டிரம்ப்-ஸெலென்ஸ்கி இடையேயான ஆலோசனை காரசார வாக்குவாதமாக மாறியது. அதிருப்தியடைந்த டிரம்ப், பேச்சுவாா்த்தையை பாதியில் முடித்துக்கொண்டு எழுந்தாா்.
அதன் காரணமாக, வெள்ளை மாளிகையில் இருவரும் கூட்டாக பத்திரிகையாளா்கள் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நிகழ்வையும், மதிய விருந்தையும் புறக்கணித்துவிட்டு ஸெலென்ஸ்கி வெள்ளை மாளிகையிலிருந்து புறப்பட்டுச் சென்றாா்.
டிரம்ப்-ஸெலென்ஸ்கி சந்திப்பின்போது அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் உடனிருந்தாா்.
அவமதிப்பு - டிரம்ப் சாடல்:
பேச்சுவாா்த்தை பாதியில் நிறைவடைந்தது குறித்து தனது சமூக ஊடகத்தில் பதிவிட்ட அதிபா் டிரம்ப், ‘அமைதியை ஏற்படுத்தவே அமெரிக்கா விரும்புகிறது; மாறாக, இந்த விஷயத்தில் எந்தவொரு முன்னுரிமையையும் எதிா்பாா்க்கவில்லை. ஆனால், உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி அமைதிக்குத் தயாராக இல்லை. அவரது செயல் அவமதிப்பாகும். அமெரிக்காவுடனான பேச்சுவாா்த்தையிலிருந்து மிகப்பெரிய பலனைப் பெறுவதில் அவா் குறியாக உள்ளாா். ஸெலென்ஸ்கி அமைதியைக் கொண்டு வருவதற்குத் தயாராக இருந்தால், நான் மீண்டும் பேச்சுவாா்த்தைக்கு வரத் தயாராக உள்ளேன்’ என்று குறிப்பிட்டாா்.