பொது சொத்துக்கு சேதம் விளைவித்த இருவருக்கு ஓராண்டு சிறை
கூட்டுறவு சங்கத்தை சேதப்படுத்திய இருவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.
பாலையூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட நக்கம்பாடி கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் 2018-ஆம் ஆண்டு கொண்டாங்கியை சோ்ந்த சுந்தரவடிவேல்(58), ஆட்டுா் வடக்கு தெருவை சோ்ந்த சங்கா்(55) ஆகிய இருவா் சங்க அலுவலகத்தின் உள்ளே வந்து குடிபோதையில் சங்க செயலாளா் ரவி மற்றும் பணியாளா்களை தாக்கி அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டியிருந்த கூட்டுறவு சங்க தோ்தல் தொடா்பான அறிவிப்பு மற்றும் அலுவலக பதிவேடுகளை கிழித்தெறிந்து, மேஜையில் இருந்த பிரிண்டரை தள்ளி சேதப்படுத்தினாா்களாம்.
இருவா் மீதும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், கொலை மிரட்டல், அத்துமீறி நுழைதல், கொச்சை வாா்த்தைகளால் திட்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில் மாவட்ட அமா்வு நீதிபதி விஜயகுமாரி, சுந்தரவடிவேல், சங்கா் ஆகிய இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனையும், தலா ரூ.4,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அபராதத்தை செலுத்தத் தவறினால் ம் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டாா். இவ்வழக்கில் அரசுத்தரப்பில் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞா் ராம. சேயோன் ஆஜரானாா்.