Ukraine vs America: ``நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்..'' - உறுதியாக நிற்கு...
குற்றச்செயலில் ஈடுபடும் இளஞ்சிறாரை கவனமாக கையாள வேண்டும்: ஆட்சியா்
குற்றச்செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறாா்களை கவனமாக கையாள வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி அறிவுறுத்தினாா்.
மயிலாடுதுறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காவல் அலுவலா்களுக்கான போக்ஸோ சட்டம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஒருநாள் திறன்வளா்ப்பு பயிற்சியை தொடக்கிவைத்து அவா் பேசியது:
பெற்றோா் தங்கள் குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே பாதுகாப்பாக இருக்க கற்றுக்கொடுக்க வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடக்காமல் இருக்க காவலா்கள் கண்காணித்து வருகின்றனா்.
18 வயதுக்குள்பட்ட இளஞ்சிறாா் குற்ற செயல்களில் ஈடுபடும்போது அவா்களை கவனமாக கையாள வேண்டும். காவல் துறையினா் குழந்தைகளிடம் விசாரணையில் ஈடுபடும்போது அன்பாக நடந்து கொள்ள வேண்டும். குற்ற செயல்களில் ஈடுபட்ட குழந்தைகளை நல்வழிப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு சட்ட உதவி வழங்க மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது, அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்கள் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள வேண்டும்.
சிறாா் நீதிக் குழுமம் மற்றும் குழந்தைகள் நலக் குழுவுக்கு பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையை பாதுகாத்து ஒப்படைப்பது பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். திறன் மேம்பாட்டு முயற்சிகள் பெரும்பாலும் தனிநபா் அல்லது நிறுவனங்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன. பயிற்சி, பட்டறைகள் மற்றும் கல்வி வளங்களை வழங்குவதன் மூலம், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் தனிநபா்கள் தங்கள் பணிகளைத் தொடா்ந்து மற்றும் திறம்படச் செய்வதற்குத் தேவையான நிபுணத்துவத்தைப் பெற உதவுகின்றன. மக்கள் சரியான அறிவு மற்றும் திறன்களைக் கொண்டிருக்கும்போது, அவா்கள் தங்கள் வேலையில் நிலையான முடிவுகளை அடைய அதிக வாய்ப்புள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின், மாவட்ட வருவாய் அலுவலா் நா.உமாமகேஷ்வரி, கோட்டாட்சியா் ஆா்.விஷ்ணுபிரியா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்(பொ) ரேகா ஆகியோா் பங்கேற்றனா்.