Seeman : 'என்னையும் என் குடும்பத்தையும் இப்படி குதறி தின்கிறீர்களே' - உணர்ச்சி வசப்பட்ட சீமான்!
நடிகை கொடுத்த பாலியல் புகாரில் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜரான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விசாரணையை முடித்துவிட்டு நள்ளிரவில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசியவை முழுமையாக இங்கே.

சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு!
சீமான் பேசியதாவது, 'விளக்கம் கேட்டார்கள். என்னுடைய பதிலை கொடுத்தேன். எதுவும் புதிதில்லை. தேவைப்பட்டால் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார்கள். எனக்கு அடுத்தடுத்த சம்மன்கள் கொடுப்பது அடக்குமுறை, அராஜகம். நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரிக்க 3 மாத கால அவகாசம் கொடுத்திருக்கிறார்கள். அவசர அவசரமாக மூன்றே நாளில் விசாரித்து முடிக்க வேண்டிய தேவை என்ன? என்னை அசிங்கப்படுத்துவதற்காகவே இப்படி செய்கிறார்கள். வீட்டில் அழைப்பாணையை ஒட்ட வேண்டிய அவசியமே இல்லை. மனைவி வீட்டிலிருந்தும் வேண்டுமென்றே அழைப்பாணையை கொடுக்காமல் ஒட்டி சென்றிருக்கிறார்கள்.
அழைப்பாணையை கிழிக்கக்கூடாதென சட்டம் இருக்கிறதா? என்னை நல்ல முறையில் நடத்தினார்கள். ஆனால், என் வீட்டில் கைது செய்த முன்னாள் இராணுவ வீரரை இரும்பு கம்பியில் துணியை கட்டி அடித்திருக்கிறார்கள். சம்மனை ஒட்டியது வளசரவாக்கம் காவல்துறை, கிழித்ததற்காக கைது செய்தது நீலாங்கரை காவல்துறை. இப்போது இங்கே விசாரணைக்காக 8 மணிக்கு வர சொன்னார்கள். அதன்பின் 10 நிமிடம் கழித்து வாருங்கள், 10 நிமிடம் கழித்து வாருங்கள் என தாமதப்படுத்தினார்கள். அதன்பிறகுதான் தெரிந்தது, முதல்வர் பிறந்தநாள் விழா நடக்கும்போது நான் வந்தால் ஊடகங்களின் கவனம் என் மீதே இருக்கும் என்பதால் வேண்டுமென்றே தாமதமாக வர வைத்தார்கள்.

கருணாநிதி ஐயா என்னை பலமுறை சிறையில் அடைத்து தலைவன் ஆக்கினார். இவர்கள் இப்படி செய்து செய்து என்னை முதல்வர் ஆக்காமல் விடமாட்டார்கள். என் மீதான நற்பெயரை சிதைக்கவே இந்த நடவடிக்கை என்பது எல்லாருக்கும் தெரியும். இந்த வழக்கை திமுகதான் அரசியல் ஆக்குகிறது. இதற்கு பின்னால் திமுகதான் இருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும்.
எனக்கு அவருக்குமான(நடிகை) உறவு திருமணம் என்கிற ஒப்பந்தத்தை நோக்கி நகரவே இல்லை. 2009-10 காலக்கட்டங்களில் நான் சிறையில் இருந்தேன். அதன்பிறகு அரசியலுக்கு வந்துவிட்டேன். அதன்பிறகு அவரை சந்திக்கவே இல்லை. பெரியாரை பற்றி பேசியதால் வழக்கை விசாரிக்க அழுத்தம் வந்ததாக சொல்கிறார்கள்.

காதல் என்று ஒன்று இருந்தால் இப்படி முச்சந்தியில் நின்று அந்த பெண் பேசுவாரா?
கொள்கையாக கருத்தாக என் தம்பி விஜய்க்கும் எனக்கும் முரண்பாடுகள் இருக்கிறது. ஆனால், அன்பு பாசத்தில் குறைவில்லை. எப்போதுமே அவர் என் அன்புக்குரிய தம்பி. பொள்ளாச்சி கூட்டு பாலியல் வல்லுறவில் நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
என்னை விட என் மனைவி மன உறுதியாக இருக்கிறார். நான் முகம் சுளிக்கும் வகையில் பேசுகிறேனா?ஒரு நடிகை தெரு தெருவாக என்னை கேவலப்படுத்திய போது யாராவது கேட்டீர்களா?என்னையும் என் குடும்பத்தையும் இப்படி குதறி தின்கிறீர்களே.
என் மூத்த மகன் வளர்ந்துவிட்டான். அவனுக்கு இதெல்லாம் புரிகிறது. அவனுடைய நண்பர்கள் எப்படி பேசுவார்கள்?விரும்பி உறவு வைத்துக் கொண்டு வேண்டாமென்று பிரிந்த பிறகு இப்போதென்ன? இந்த விஷயத்தில் பேச திமுகவில் இருக்கும் ஒரு தலைவனுக்காவது தகுதி இருக்கிறதா?' என்றார். மேலும் பேசியவர், "மாண்புமிகு தமிழக முதல்வர் அப்பா ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்." என்றார்.

கிட்டத்தட்ட ஒன்றைரை மணி நேரத்துக்கு சீமானிடம் விசாரணை நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. விசாரணையை முடித்து செல்கையில் கூடியிருந்த தொண்டர்கள் சீமானை வரவேற்று ஆரவாரமிட்டனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
