முதல்வர் பிறந்தநாள்: தமிழில் கையெழுத்திட்டு ஆளுநர் வாழ்த்துக் கடிதம்!
Siddaramaiah: `நம்மை பலவீனப்படுத்தும் முயற்சி' - தொகுதி மறுசீரமைப்பை எதிர்க்க சித்தராமையா அழைப்பு
நாடாளுமன்ற இடங்களுக்கான தொகுதி மறு சீரமைப்பு குறித்த மத்திய அரசின் ஆர்வத்தைக் கண்டித்துள்ளார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா.
பாஜகவின் ஆதிக்கத்தை எதிர்க்கும் தென்னிந்திய மாநில மக்களுக்கு வழங்கப்படும் தண்டனை என இதைக் கூறிய சித்தராமையா, இந்த அநீதிக்கு எதிராக தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய தென்னிந்திய மாநிலங்கள் ஒன்றுசேர்ந்து போராட வேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார்.
தேசிய அளவில் மத்திய அரசின் பாரபட்சமான கொள்கைகளுக்கு எதிராக போராட பிற மாநிலங்களை ஒருங்கிணைக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற எல்லை நிர்ணய விவகாரத்தில் அமித்ஷா கூறிய கருத்துகளையும் கடிந்துகொண்டுள்ளார் சித்தராமையா. அவரது கருத்துகள் நம்பகத்தன்மை அற்றது எனவும் 'தவறாக வழிநடத்துவதாகவும்' தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அவர்களின் அஜெண்டா படி, நியாயமற்றமுறையில் வடக்கு மாநிலங்களுக்கு சாதகமாயிருப்பதற்காக தெற்கு மாநிலங்குகளுக்கு இடையில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறது என அவர் சாடியுள்ளார்.

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு?
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தென் மாநிலங்கள் பாதிக்கப்படாது என்ற அமித் ஷாவின் கருத்தை எதிர்த்து கேள்வி எழுப்பியுள்ள சித்தராமையா, `தொகுதி மறு சீரமைப்பு மக்கள்தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையில் இருக்குமா அல்லது தற்போதைய மக்களவை இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இருக்குமா என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும்’ என்று கோரியிருக்கிறார்.
மக்கள்தொகை அடிப்படையில் இருக்குமானால், அது நிச்சயமாக தென் மாநிலங்களைப் பாதிக்கும். வடக்கு மாநிலங்கள் வளர்ச்சியை எட்டவும், மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும் தவறிய நிலையில், தென் மாநிலங்கள் சிறப்பாக மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியிருக்கின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
'நியாயமற்ற' நிர்ணயம் - சித்தராமையா
"வரலாற்றுப்பூர்வமாக இந்த பிரச்னையைத் தவிர்க்க 1971 மக்கள்தொகை அடிப்படையிலேயே தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்திய மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற இருக்கைகள் ஒதுக்கப்பட்டால் கர்நாடகாவின் தொகுதிகள் எண்ணிக்கை 28லிருந்து 26-ஆக குறையும். ஆந்திர பிரதேசத்தின் தொகுதிகள் எண்ணிக்கை 42லிருந்து 34-ஆக குறையும். கேரளாவின் தொகுதிகள் எண்ணிக்கை 20லிருந்து 12-ஆக குறையும். தமிழ்நாட்டின் எண்ணிக்கை 34 -ஆக குறையும். ஆனால் அதேவேளையில்,உத்தரபிரதேசத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை 80லிருந்து 91-ஆகவும் பீகாரில் 40லிருந்து 50 -ஆகவும் மத்திய பிரதேசத்தில் 29லிருந்து 33 ஆகவும் உயரும்." என்று சித்தராமையா கூறியுள்ளார்.

இது அப்பட்டமான அநீதி என்றும் இதைப் பொருத்துக்கொள்ள முடியாது என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார். 1971 மக்கள்தொகைப்படி அல்லது தெற்கு மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவத்தைக் குறைக்காமல் மறுசீரமைப்பு நடைபெற வேண்டும் என்றுக் கூறியுள்ளார்.
அரசியல் ஆயுதம்
மோடி அரசு பாஜக ஆளாத மாநிலங்களை பழிவாங்கும் அரசியல் ஆயுதமாக தொகுதி மறுவரையை பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த தேர்தலில் ஜே.பி.நட்டா வெளிப்படுத்திய எச்சரிக்கையை சுட்டிக்காட்டியுள்ளார் சித்தராமையா. பாஜக ஆதரவு இல்லாமல் கர்நாடகா பாதிக்கப்படும் என நட்டா கூறியதாக சித்தராமையா சுட்டிக்காட்டியுள்ளார்.
கன்னட மக்கள் சாதி, மத, கட்சி வேறுபாடுகளைக் கடந்து இந்த அநீதியை எதிர்க்க வேண்டும் என்று கோரியுள்ளார். பாஜகவின் நடவடிக்கைகளால் கர்நாடகா மாநிலம் நிதி பற்றாக்குறைக்கு தள்ளப்பட்டாலும் பாஜக எம்.பிக்கள் மௌனமாகவே இருப்பார்கள் என்று சித்தராமையா பேசியுள்ளார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
