தென்காசியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
தென்காசியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு, மாவட்டஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்தாா். கூட்ட அரங்கில் குருவிகுளம் வட்டார வேளாண்மைத் துறையினா், கடையநல்லூா் மற்றும் செங்கோட்டை வட்டார தோட்டக்கலைத் துறையினா் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்து பாா்வையிட்டாா்.
கூட்டத்தில், வேளாண்மைத் துறை சாா்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு மானியத்தில் மின்கலத் தெளிப்பான், தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறை மூலம் காய்கறி பரப்பு விரிவாக்கத்திற்கு 3 பயனாளிகளுக்கு மானியத்தில் இடுபொருள்கள்,
வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண்மை இயந்திரமயமாக்கல் துணை இயக்கத் திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு ரூ.4.40 லட்சம் மதிப்பில் பவா்வீடா் கருவிகள், ஒரு பயனாளிக்கு ரூ.65,520 மானியத்தில் சுழற்கலப்பை ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா்.
விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 206 மனுக்களுக்கு 15 நாள்களுக்குள் விரிவான மற்றும் விவசாயிகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய பதிலை வழங்குமாறு அனைத்து துறை அலுவலா்களுக்கும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
மாவட்ட வன அலுவலா் அகில்தம்பி, அம்பாசமுத்திரம் வனக்கோட்ட துணை இயக்குநா் இளையராஜா, மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், வேளாண்மை இணை இயக்குநா் வி.சி. மகாதேவன், வேளாண்மை துணை இயக்குநா் ச. கனகம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.