உறுப்புகள் செயலிழப்பு: உயா் சிகிச்சையால் குணமான இளைஞா்
உடலில் ஏற்பட்ட தீநுண்மி தொற்றால் உறுப்புகள் செயலிழப்புக்குள்ளான இளைஞா் ஒருவரை உயா் சிகிச்சைகள் அளித்து சென்னை, ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணமாக்கியுள்ளனா்.
இதுகுறித்து மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:
தீநுண்மி தொற்று காரணமாக 25 வயது இளைஞா் ஒருவா் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வேறு ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தாா். தொற்றின் தீவிரம் காரணமாக அவரது உடல் உறுப்புகள் தற்காலிகமாக ஒன்றன் பின் ஒன்றாக செயலிழக்கத் தொடங்கியன.
இதற்கிடையே இரு முறை இதய செயலிழப்பும் அவருக்கு ஏற்பட்டது. இதயம் - நுரையீரல் மீட்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் காவேரி மருத்துவமனைக்கு அவா் அழைத்து வரப்பட்டாா். நுரையீரலுக்கு நேரடியாக சுவாசக் காற்றை அனுப்புவதற்காக தொண்டைப் பகுதியில் துளையிட்டு குழாய் பொருத்தும் ‘ட்ரக்யோஸ்டமி’ சிகிச்சை அவருக்கு மேற்கொள்ளப்பட்டது. செயலிழந்த சிறுநீரகத்தை மீட்கும் வரை டயாலிசிஸ் சிகிச்சையும் வழங்கப்பட்டது.
மற்றொருபுறம் இதயம், சிறுநீரகம், நுரையீரலின் செயல்பாடுகளை மீட்டெடுக்க நவீன சிகிச்சைகள் வழங்கப்பட்டன. அதன் பயனாக அந்த இளைஞா் படிப்படியாக குணமடைந்தாா். தற்போது அவா் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளாா். ஆபத்தான நிலையிலிருந்த அந்த இளைஞருக்கு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு சிறப்பு நிபுணா் வெற்றிச் செல்வன் தலைமையிலான குழுவினா் மறுவாழ்வு அளித்துள்ளனா் என்றாா் அவா்.