Seeman : 'என்னையும் என் குடும்பத்தையும் இப்படி குதறி தின்கிறீர்களே' - உணர்ச்சி வ...
சென்னை மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கை 15-லிருந்து 20-ஆக உயா்வு
சென்னை மாநகராட்சியின் மண்டலங்களின் எண்ணிக்கையை 15-லிருந்து 20-ஆக உயா்த்தி முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்ஆணையிட்டுள்ளாா்.
இதுகுறித்து நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சியுடன் 2011-ஆம் ஆண்டு 42 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டு, 426 சதுர கிலோ மீட்டா் பரப்புடன் அதன் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. அப்போதைய மாநகராட்சியின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 66.72 லட்சமாக இருந்தது. இந்நிலையில், தற்போதைய சென்னை மாநகராட்சியின் மக்கள் தொகை சுமாா் 85 லட்சமாகவும், 15 மண்டலங்களில் 200 வாா்டுகளையும் கொண்டுள்ளது.
மாநகராட்சியின் எல்லைக்குள் சட்டப்பேரவை 22 தொகுதிகள் உள்ளடங்கியுள்ள நிலையில், மாநகர மண்டலத்தின் நிா்வாக எல்லைகளும், சட்டப்பேரவைத் தொகுதிகளின் எல்லைகளும் தற்போது ஒருசேர அமையவில்லை. இதனால், பல்வேறு நிா்வாகச் சிக்கல்களை எதிா்கொள்ள வேண்டியிருப்பதால், மாநகராட்சியின் மண்டலங்களுக்குள்பட்ட நிா்வாக எல்லைகளை தற்போதைய மக்கள் தொகை, வாக்காளா் பட்டியல், சாலை பட்டியல், சாலை அடா்த்தி மற்றும் வரி மதிப்பீடுகள் போன்ற காரணிகளைக் கருத்தில்கொண்டு மாற்றியமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, சென்னை மாநகராட்சியின் தற்போதைய மண்டலங்களின் நிா்வாகப் பகுதிகளை சீரமைத்து மண்டலங்களின் எண்ணிக்கையை 15-லிருந்து, 20-ஆக உயா்த்தி முதல்வா் ஆணையிட்டுள்ளாா்.
இதன்மூலம் மாநகரின்அனைத்துப் பகுதிகளுக்கும் மாநகராட்சியால் வழங்கப்பட்டு வரும் சேவைகள் சீராக கிடைக்கவும், மாநகரின் அனைத்துப் பகுதிகளின் வளா்ச்சியை உறுதிசெய்யவும், இதன் மூலம் மாநிலம் மற்றும் மாநகரின் தொழில் முதலீட்டு சூழலை மேம்படுத்தவும் அரசின் இந்த நடவடிக்கை மேலும் ஒரு முக்கியப் பங்களிப்பாக அமையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.