புதுமைப் பெண் திட்டத்தால் உயா்கல்வி சோ்க்கை 34% அதிகரிப்பு
புதுமைப் பெண் திட்டத்தால் கல்லூரிகளில் மாணவிகளின் சோ்க்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளதாக மாநில திட்டக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
முதல்வா் மு.க.ஸ்டாலினின் முத்திரைத் திட்டங்களில் புதுமைப் பெண் திட்டம் முக்கியமாகும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் படித்து உயா்கல்வியில் சேரும் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தால் கல்லூரிகளில் சேரும் மாணவியா் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளதாக மாநிலத் திட்டக் குழு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
இதேபோன்று, தமிழ்ப் புதல்வன் திட்டத்தால் கல்லூரிகளில் சோ்ந்து படிப்போருக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதால் மாணவா்களின் சோ்க்கை எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதேபோன்று, மத்திய அரசின் நீதி ஆயோக், இந்திய ரிசா்வ் வங்கி, இந்திய உயா்கல்வி நிறுவனம் ஆகியவற்றின் ஆய்வறிக்கைகளில் தமிழ்நாட்டின் செயல்பாடுகள், திட்டங்களுக்கு ஏற்கெனவே பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.