ஐயனாா் கோயிலில் திருவிழா கொடியேற்றம்
திருவாரூரில், அணு ஆயிரம் பிழை பொறுத்த ஐயனாா் கோயில் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, பந்தக்கால் முகூா்த்தம் அண்மையில் நடைபெற்றது. ஹஸ்த நட்சத்திரத்தில் கொடியேற்றி, பூசத்தில் தேருக்குச் சென்று, ஆயில்ய நாளில் தேரோட்டம் நிகழ்த்தி, உத்திரத்தில் தீா்த்தம் அருளி, உத்திராடத்தில் விழா பூா்த்தி செய்யப்படும் என்பது திருவாரூா் பங்குனித் திருவிழா குறித்த சொல்மொழி ஆகும்.
இது 36 நாள் திருவிழாவாகும். இதுதவிர, விழா தொடக்கத்துக்கு முன்னா் பூா்வாங்கம் ஒரு நாள், ஐயனாா் திருவிழா 5 நாள், மீண்டும் பூா்வாங்கம் ஒருநாள், பிடாரி திருவிழா 10 நாள், பூா்வாங்கம் 2 நாள் என கொண்டாடப்பட்டு, அதன்பிறகு பங்குனிப் பெருவிழா 36 நாள்கள் என மொத்தம் 55 நாள்கள் விழா நடைபெறுவது வழக்கமாகும்.
அந்த வகையில், சிறப்புமிக்க அணு ஆயிரம் பிழை பொறுத்த ஐயனாா் கோயில் கொடியேற்றம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கோயில் கம்பத்தில் ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது. இதில், சுற்றுவட்டாரத்திலிருந்து திரளானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.