ரூ.6.72 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் ஒருவா் கைது
திருத்துறைப்பூண்டியில் ரூ.6.72 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை பதுக்கி வைத்திருந்தவா் கைது செய்யப்பட்டாா்.
திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், திருத்துறைப்பூண்டி காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன், காவல் ஆய்வாளா் மாரிமுத்து ஆகியோரைக் கொண்ட தனிப் படையினா் திருத்துறைப்பூண்டி பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக சோதனை மேற்கொண்டனா்.
இந்த சோதனையில், மருத்துவமனை தெருவில் உள்ள ஒரு குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த குடோனில் இருந்த ரூ. 6.72 லட்சம் மதிப்பிலான 476 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக, ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த சங்கா் (30) என்பவரை கைது செய்து, திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, சிறையில் அடைத்தனா்.