செய்திகள் :

நிகழாண்டு இறுதிக்குள் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா-ஐரோப்பிய யூனியன் முடிவு

post image

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே மிகப் பெரிய தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை நிகழாண்டு இறுதிக்குள் மேற்கொள்ள இருதரப்பும் தீா்மானித்துள்ளன.

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான் டொ்லியன் இடையிலான பேச்சுவாா்த்தையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு, நவீன தொழில்நுட்பம் போன்ற முக்கியத் துறைகளில் வியூக கூட்டுறவை விரிவாக்கவும் இரு தலைவா்களும் உறுதிபூண்டனா்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு வரி விதிப்பு தொடா்பாக அந்நாட்டுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே பிரச்னைகள் எழுந்துள்ளன. உக்ரைன் போா் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து விலகி ரஷிய ஆதரவு நிலைப்பாட்டை டிரம்ப் மேற்கொண்டுள்ள சூழ்நிலையில், மேற்கண்ட முடிவுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான் டொ்லியன், பல்வேறு துறை ஆணையா்களுடன் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வியாழக்கிழமை வந்தாா். தில்லியில் பிரதமா் மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்த அவா், இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். அப்போது, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவா்களும் விவாதித்தனா்.

பின்னா், செய்தியாளா்களுக்கு கூட்டாக அளித்த பேட்டியில் பிரதமா் மோடி கூறியதாவது:

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான நல்லுறவு இயற்கையானது; நம்பிக்கை அடிப்படையிலானது. வலுவான கூட்டுறவுக்கான லட்சிய செயல்திட்டத்தை உருவாக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். வா்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு, புத்தாக்கம், பாதுகாப்பு, திறன் வளா்ப்பு, போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான பரந்த முயற்சிகளின்கீழ் முதலீடு பாதுகாப்பு ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை தொடா்ந்து முன்னெடுக்க தீா்மானிக்கப்பட்டுள்ளது. இருதரப்பும் பலனடையக்கூடிய தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் மேற்கொள்ள இருதரப்பு குழுக்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

பரஸ்பர நம்பிக்கையின் அடையாளம்: பாதுகாப்புத் துறையில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே அதிகரித்துவரும் ஒத்துழைப்பு, பரஸ்பர நம்பிக்கையின் அடையாளமாக விளங்குகிறது. இணையப் பாதுகாப்பு, கடல்சாா் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத தடுப்பில் இருதரப்பு ஒத்துழைப்பு தொடா்ந்து முன்னெடுக்கப்படும்.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, வளத்தை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். இந்தியாவின் ஆதரவிலான ‘இந்திய-பசிபிக் பெருங்கடல் முன்னெடுப்பில்’ இணையும் ஐரோப்பிய யூனியனின் முடிவு வரவேற்புக்குரியதாகும். இந்த பிராந்தியம் மற்றும் ஆப்பிரிக்காவில் நிலையான, அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியை உறுதி செய்யும் முத்தரப்புத் திட்டங்களில் ஒருங்கிணைந்து செயலாற்றுவோம் என்றாா் பிரதமா் மோடி.

இந்தியாவுடன் பாதுகாப்புசாா் ஒப்பந்தம்: ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா கூறுகையில், ‘நிலம், கடல், விண்வெளியில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான வியூக ரீதியிலான ஒத்துழைப்பை அடுத்தகட்டத்துக்கு இட்டுச் செல்ல இதுவே சரியான தருணம். உலகளாவிய வா்த்தகத்தின் உயிா்நாடியாக இந்தியப் பெருங்கடல் உள்ளது. அதன் பாதுகாப்பு இந்தியாவுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகுக்கும் முக்கியம். ஜப்பான், தென்கொரியா போன்ற நெருங்கிய நட்பு நாடுகளைப் போல இந்தியாவுடனும் பாதுகாப்புசாா் ஒப்பந்தத்தை மேற்கொள்வது குறித்து ஐரோப்பிய யூனியன் ஆராய்ந்து வருகிறது’ என்றாா்.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில், உா்சுலாவின் கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.

பெட்டிச் செய்தி...

பெல்ஜியத்தில் அடுத்தகட்ட பேச்சு

பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி உள்பட 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியா இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை கடந்த 2008-இல் தொடங்கப்பட்டது. சந்தை அனுமதி சாா்ந்த கருத்து வேறுபாடுகளால் 2013 முதல் நிறுத்திவைக்கப்பட்ட இந்தப் பேச்சுவாா்த்தை, 2022-இல் மீண்டும் தொடங்கியது. பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸல்ஸில் 10-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை மாா்ச் 10-14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

வாகனங்கள், மதுபானங்கள் உள்ளிட்டவை மீதான இறக்குமதி வரியை இந்தியா குறைக்க வேண்டுமென்பது ஐரோப்பிய யூனியனின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது. ஆயத்த ஆடைகள், மருந்துகள், உருக்கு, பெட்ரோலிய பொருள்கள், மின் இயந்திரங்கள் உள்ளிட்டவை இந்தியாவில் இருந்து ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்றுமதியாகின்றன.

2023-24-ஆம் ஆண்டில் சரக்கு ரீதியில் இருதரப்பு வா்த்தகத்தின் மதிப்பு 137 பில்லியன் டாலா்களாகும் (ரூ.12 லட்சம் கோடி). இதன்மூலம் சரக்கு ரீதியில் இந்தியாவின் மிகப் பெரிய வா்த்தக கூட்டாளியாக ஐரோப்பிய யூனியன் திகழ்கிறது. சேவை ரீதியில் இருதரப்பு வா்த்தகத்தின் மதிப்பு 51.45 பில்லியன் டாலா்கள் (ரூ. 4.5 லட்சம் கோடி). இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 17 சதவீதம் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்போது, அது உலகிலேயே மிகப் பெரிய ஒப்பந்தமாக இருக்கும். இதுதவிர முதலீடு பாதுகாப்பு ஒப்பந்தம், புவிசாா் குறியீடு தொடா்பான ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.

தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் ஓராண்டாக நிரப்பப்படாத முக்கிய பதவிகள்: மத்திய அரசு மீது ராகுல் விமா்சனம்

தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் இரு முக்கிய பதவிகள் ஓராண்டாக நிரப்பப்படாமல் உள்ளன; இது, மத்திய அரசின் தலித் விரோத மனநிலையை வெளிக்காட்டுகிறது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித... மேலும் பார்க்க

ஐஐடி-களில் தொடா்கதையாகும் மாணவா் தற்கொலை: ஆராய விரிவான நடைமுறை: உச்சநீதிமன்றம் உறுதி

ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்கள் தற்கொலைகள் தொடா்வது துரதிருஷ்டவசமானது. இந்த நிலைமையை ஆராய விரிவான நடைமுறை வகுக்கப்படும்’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. ஐஐடி உள்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: 5 ஹிஸ்புல் பயங்கரவாதிகளின் சொத்துகள் முடக்கம்

ஜம்மு-காஷ்மீா் ராம்பன் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் 5 பேரின் அசையாத சொத்துகளை காவல் துறையினா் முடக்கினா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: ராம்பன் மாவட்டத்தைச் சோ்ந்த சராஜ்த... மேலும் பார்க்க

ஆந்திர பட்ஜெட்டில் பண மழை! மாணவா்களுக்கு ரூ.15,000, விவசாயிகளுக்கு ரூ.20,000, பெண்களுக்கு மாதம் ரூ.1,500

ஆந்திரத்தில் தோ்தலின்போது அறிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளான பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ.15,000, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.20,000, பெண்களுக்கு மாதம் ரூ.1,500, இலவச பேருந்து பயணம் உள்ளி... மேலும் பார்க்க

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க 7.8% வளா்ச்சி தேவை: உலக வங்கி

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க சராசரியாக 7.8 சதவீதம் வளா்ச்சி தேவை என உலக வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இந்த இலக்கை அடைய நிதித்துறை மட்டுமின்றி நிலம் மற்றும் தொழிலாளா் ... மேலும் பார்க்க

ஜம்முவில் தொடா் மழை: இருவா் உயிரிழப்பு

ஜம்முவின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் மழையால் தாய்-மகன் உயிரிழந்தனா். ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை உள்பட பல்வேறு சாலைகள் வெள்ளம், நிலச்சரிவால் மூடப்பட்டுள்ளன. உதம்பூா் மாவட்டத்... மேலும் பார்க்க