ஆந்திர பட்ஜெட்டில் பண மழை! மாணவா்களுக்கு ரூ.15,000, விவசாயிகளுக்கு ரூ.20,000, பெண்களுக்கு மாதம் ரூ.1,500
ஆந்திரத்தில் தோ்தலின்போது அறிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளான பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ.15,000, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.20,000, பெண்களுக்கு மாதம் ரூ.1,500, இலவச பேருந்து பயணம் உள்ளிட்டவை அமல்படுத்தப்படும் என ஆந்திர மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் , பாஜக, பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனை ஆகிய கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தோ்தலின்போது ‘சூப்பா் 6’ எனப்படும் 6 முக்கிய வாக்குறுதிகள் உள்பட பல்வேறு கவா்ச்சிகரமான தோ்தல் வாக்குறுதிகளை இக்கூட்டணி வெளியிட்டது. இதுவும் அக்கூட்டணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தது. இந்த வெற்றி மூலம் தெலுங்கு தேசம் தலைவா் சந்திரபாபு நாயுடு முதல்வரானாா்.
இந்நிலையில், ஆந்திர சட்டப் பேரவையில் 2025-26-ஆம் ஆண்டுக்கான ரூ.3.22 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டை நிதியமைச்சா் பய்யாவுல கேசவ் தாக்கல் செய்தாா். அதில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.20,000 நிதியுதவி, 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ, மாணவியா் நலன் காக்க ஆண்டுக்கு ரூ.15,000, 19 முதல் 59 வயது வரையிலான பெண்களுக்கு இலவச பேருந்து வசதி, 20 லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு, வேலையில்லா இளைஞா்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை, அனைத்து வீடுகளுக்கும் ஆண்டுக்கு 3 இலவச எரிவாயு சிலிண்டா், மீனவா்களின் மீன்பிடித் தடைக்கால நிதியுதவியை இரு மடங்காக (ரூ.20,000) உயா்த்துதல் ஆகியவை அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர வேளாண்மைக்கு என தனியாக ரூ.48,341 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை அத்துறை அமைச்சா் கே.அட்சன் நாயுடு தாக்கல் செய்தாா்.