காவல் துறைக்கு அழுத்தம் தருகிறது அரசு: சீமான்
காவல் துறை விசாரணையில் புதிய கேள்விகள் ஏதும் இல்லை என்றும் பழைய கேள்விகளே கேட்கப்பட்டதாகவும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
காவல் துறையினர் மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் ஒத்துழைப்பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை அளித்த பாலியல் புகார் வழக்கில் சென்னையில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் காவல் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணைக்குப்பின் வெள்ளிக்கிழமை (பிப். 28) இரவு சீமான் செய்தியாளர்களுடன் பேசினார்.
சீமான் பேசியதாவது : காவல் துறை கேட்ட கேள்விகளுக்கெல்லாம் உரிய விளக்கமளித்துள்ளேன். தேவைப்படும்பட்சத்தில் காவல் துறை விசாரணைக்கு மீண்டும் ஒத்துழைக்க கேட்டுக் கொண்டார்கள். எனக்கு சம்மன் வீட்டுக்கு கொண்டுவந்து தந்தனர்.
என் வீட்டுக்கு காவலாளிகள் பணியில் யாரும் அமர்த்தப்படவில்லை. என் வீட்டில் காவல் பணியிலிருந்தவர் என் மீதான பாசத்தால் எனக்குரிய பாதுகாப்பை அளித்து வந்தவர். அவர் ஓய்வுபெற்ற ஒரு ராணுவ வீரராவார். அவர்களை காவல்துறை அடித்து துன்புறுத்தியது தவறு என்றார்.