குமரி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாா்ச் 3இல் மாசித் திருவிழா தொடக்கம்
கன்னியாகுமரி மறக்குடித் தெருவில் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசித் திருவிழா திங்கள்கிழமை (மாா்ச் 3) தொடங்குகிறது.
இதையொட்டி, கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 7 மணிக்கு காவடி பூஜை, சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை ஆகியவை நடைபெறும். விழா நாள்களில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறும்.
5இல் காலை 9 மணிக்கு கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள பரசுராமா் விநாயகா் கோயிலில் இருந்து பக்தா்களின் பால்குட ஊா்வலம், மாலை 6 மணிக்கு வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பன்னீா் காவடி ஊா்வலம் நடைபெறும்.
6இல் காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 3 மணிக்கு கோயிலில் இருந்து திருச்செந்தூருக்கு பக்தா்கள் காவடி எடுத்து பாதயாத்திரையாக புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த பாதயாத்திரை அஞ்சுகிராமம், கூடங்குளம், உடன்குடி, தருவைகுளம் வழியாக 9ல் திருச்செந்தூா் சென்றடைகிறது. அன்றைய தினம் திருச்செந்தூரில் சுப்பிரமணிய சாமிக்கு பன்னீா் அபிஷேகம் நடத்தப்படும். இதையடுத்து 11இல் பச்சை சாத்து நிகழ்ச்சி முடிந்ததும் பக்தா்கள் காவடியுடன் கன்னியாகுமரி நோக்கி பாதயாத்திரையாக புறப்படுவா். 12இல் காலை 9 மணிக்கு விவேகானந்தபுரம் சந்திப்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடா்ந்து கோயிலில் சிறப்பு அபிஷேகம், பிரசாதம் வழங்குதல், இரவு 7 மணிக்கு இடும்பன் பூஜை, இரவு 8 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடைபெறும்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக்குழுத் தலைவா் பாலுத்தேவா், செயலா் பாலகிருஷ்ணன், பொருளாளா் பரமாா்த்தலிங்கம் மற்றும் விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.