கல்வியில் தமிழ்நாடு முன்னிலை; சீர்குலைக்கும் முயற்சியில் மத்திய அரசு: முதல்வர்
மும்மொழி கொள்கைக்கு எதிரான அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுகவும் பங்கேற்பவிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72 ஆவது பிறந்தநாளையொட்டி, ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, ``மற்ற மாநில அரசுகளும் வியந்து பார்க்கும் வகையில், தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறது. இதனை பாஜகவால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. 2021-ல் தப்பித்தவறி அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருந்தால், இன்று தமிழ்நாடு தரைமட்டத்துக்குச் சென்றிருக்கும்.
இந்த நிலையில்தான், தமிழ்நாடு கல்வியில் முன்னணியில் இருப்பதை அறிந்து, அதனைச் சீர்குலைக்க தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துகின்றனர். கல்விக்கான நிதியைக்கூட அளிக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது.
இதையும் படிக்க:மயிலாடுதுறை ஆட்சியருக்கு அண்ணாமலை கண்டனம்
நம்மை அடக்குவதற்காக தொகுதி மறுசீரமைப்பை கொண்டுவந்துள்ளனர். நீட் தேர்வைத் திணித்தார்கள்; புயல், வெள்ளம் முதலான பேரிடரின்போது, நிதியும் கொடுப்பதில்லை. நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?
இது தொடர்பாக நடைபெறவுள்ள மார்ச் 5 ஆம் தேதியில் அனைத்து கட்சி கூட்டத்துக்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பாஜகவும் துணைநிற்க வேண்டும். தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கி. வீரமணி, வைகோ, திருமாவளவன், செல்வப்பெருந்தகை, பெ.சண்முகம், முத்தரசன், வேல்முருகன், ஈஸ்வரன், காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கருணாஸ், எர்னாவூர் நாராயணன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.