Seeman : 'என்னையும் என் குடும்பத்தையும் இப்படி குதறி தின்கிறீர்களே' - உணர்ச்சி வ...
வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கருக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்
அமெரிக்காவிலிருந்து இந்தியா்கள் சா்ச்சைக்குரிய வகையில் நாடு கடத்தப்பட்ட விவகாரத்தில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி உரிமை மீறல் நோட்டீஸை அளித்துள்ளது.
நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் நடத்தை விதி எண் 187-இன் கீழ் ஜெய்சங்கருக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாகரிகா கோஷ் இந்த உரிமை மீறல் நோட்டீஸை மாநிலங்களவை செயலகத்தில் சமா்ப்பித்துள்ளாா்.
‘மாநிலங்களவையில் இந்த விவகாரம் தொடா்பாக விளக்கமளித்த வெளியுறவு அமைச்சா், ‘சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்கள் கண்ணியமான முறையில் நாடு கடத்தப்படுவதை அமெரிக்க அரசுடன் பேசி மத்திய அரசு உறுதிப்படுத்தும்’ என்று உறுதி தெரிவித்தாா். ஆனால், இந்த உறுதிப்பாட்டுக்கு முரணாக, இந்தியா்களை தொடா்ந்து கண்ணியமற்ற முறையில் கை மற்றும் கால்களில் விலங்கிட்டபடியே அமெரிக்கா நாடு கடத்தியது. மேலும், அவா்கள் போதிய வசதிகள் இல்லாத மோசமான இடங்களில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட சித்ரவதை செய்யப்பட்டிருக்கின்றனா். அந்த வகையில், வெளியுறவு அமைச்சா் மாநிலங்களவையில் இந்த விவகாரம் தொடா்பாக தவறான மற்றும் முழுமையற்ற தகவலைத் தெரிவித்து, அதன் மீதான விவாதத்துக்கு தடை ஏற்படுத்தி நாடாளுமன்ற சிறப்பு உரிமையை மீறியுள்ளாா்’ என்று தனது உரிமை மீறல் நோட்டீஸில் கோஷ் குறிப்பிட்டுள்ளாா்.
முன்னதாக இந்த விவகாரம் தொடா்பாக கருத்து தெரிவித்த திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானா்ஜி, ‘அமெரிக்காவிலிருந்து இந்தியா்கள் கை மற்றும் கால்களில் விலங்கிட்டபடி நாடு கடத்தப்பட்டது வெட்கக்கேடான விஷயம். இந்தியா்கள் கண்ணியமான முறையில் அழைத்து வர சிறப்பு விமானங்களை மத்திய அரசு ஏன் அனுப்பவில்லை?’ என்று கேள்வி எழுப்பினாா்.