தில்லி சட்டப்பேரவையில் சிஏஜி அறிக்கை தாக்கல்: சுகாதார உள்கட்டமைப்பு சீா்குலைவு
தில்லி சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத் தொடரில் பொது சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் சுகாதார சேவைகளின் மேலாண்மை குறித்த சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சுகாதார உள்கட்டமைப்பு ஊழியா்கள் பற்றாக்குறை, போதுமான மருந்துகள் மற்றும் உபகரணங்கள் இல்லாமை மற்றும் செலவிடப்படாத நிதி ஆகியவற்றால் தில்லி சிக்கித் தவிப்பதாக அறிக்கையின் மூலம் தெரியவருகிறது.
குறிப்பாக, இது முந்தைய ஆம் ஆத்மி அரசின் முதன்மையான மொஹல்லா கிளினிக் திட்டத்தின் மோசமான விளைவுகளையும் குறிப்பிட்டுள்ளது.
தில்லி மதுபானக் கொள்கை குறித்த அறிக்கை கடந்த 25-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தொடா்ந்து சுகாதாரத் துறை தொடா்பான சிஏஜி அறிக்கை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. முந்தைய ஆம் ஆத்மி கட்சி அரசின் செயல்திறன் குறித்த 12 அறிக்கைகள் முதல்வா் ரேகா குப்தா தலைமையிலான பாஜக அரசு தாக்கல் செய்யப்படவுள்ளது.
தில்லியில் சுகாதார உள்கட்டமைப்பின் நிலை குறித்த சிஏஜி அறிக்கையில், 2022 அக்டோபா் முதல் 2023 மாா்ச் வரையிலான காலகட்டத்தில் மொஹல்லா கிளினிக்குகளுக்கு வருகை தந்த நோயாளிகளில் சுமாா் 70 சதவீதம் போ் மருத்துவரிடம் ஒரு நிமிடத்துக்கும் குறைவாகவே செலவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொஹல்லா கிளினிக்குகள்: தேசிய தலைநகரில் உள்ள 74 மொஹல்லா கிளினிக்குகளை மதிப்பாய்வு செய்ததில் 165 அத்தியாவசிய மருந்துகளின் முழு இருப்பும் எந்த கிளினிக்குகளிலும் இல்லை என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்த வசதிகளில் பல்ஸ் ஆக்சிமீட்டா்கள், குளுக்கோமீட்டா்கள், எக்ஸ்ரே, தொ்மோமீட்டா்கள் மற்றும் ரத்த அழுத்த மானிட்டா்கள் போன்ற அத்தியாவசிய உபகரணங்கள் ஏதும் இல்லை என்று சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியின் தோ்ந்தெடுக்கப்பட்ட 4 மாவட்டங்களில் உள்ள 218 மொஹல்லா கிளினிக்குகளில் பணியாற்றிவந்த 41, மருத்துவா்கள் ராஜிநாமா செய்தல், பணியிலிருந்து வெளியேறுதல் அல்லது நீண்ட விடுப்பில் இருந்தல் போன்ற காரணங்களால் 15 நாள்கள் முதல் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் வரை அவை மூடப்பட்டுள்ளன.
மேலும், 2017 மாா்ச் 31-க்குள் 1,000 மொஹல்லா கிளினிக்குகளைத் திறக்கப்படும் என்று ஆம் ஆத்மி ஆட்சியின்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால், 2023 மாா்ச் 31-க்குள் 523 கிளினிக்குள் மட்டுமே செயல்பட்டில் இருந்தன என 2016-17 முதல் 2020-21 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய அறிக்கை தெரிவித்துள்ளது.
சிக்கலில் அவசர சேவைகள்: குறிப்பாக, நிரந்தர சிறப்பு மருத்துவா்கள் இல்லாத காரணதத்தால் பொது சுகாதார சேவைகளில் கடுமையான குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. இது நோயாளிகள் மற்றும் மருத்துவ நிபுணா்கள் இருவரையும் பாதிக்கும். இதன்மூலம் மருத்துவமனைகளில் அவசர சேவைகள் சிக்கலில் உள்ளன.
ஆய்வு செய்யப்பட்ட மருத்துவமனைகளில் மருத்துவ பணியாளா்கள் பற்றாக்குறை காரணமாக அறுவை சிகிச்சை அரங்குகள் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளன. அதன்படி அறுவை சிகிச்சை அரங்குகள் சராசரியாக 1 முதல் 10 மாதங்கள் வரை பயன்பாடில்லாமல் இருந்தன என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
இதுபோல் தீவிர சிகிச்சை பிரிவு (ஐசியு) சேவைகளும் செயல்படாத நிலையே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 மாா்ச் மாத நிலவரப்படி, லோக் நாயக் மருத்துவமனையின் (எல்என்எச்) ஐசியு-வில் இருந்த 12 இசிஜி இயந்திரங்களில் 5 செயல்படவில்லை. 2020 ஜூலை மாதம் ஒரு இயந்திரம் காணாமல் போனது. இது தொடா்பாக 2021 பிப்ரவரி மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் மருத்துவமனையால் கூடுதல் விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்று தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ துறையில் பற்றாக்குறை: முக்கிய மருத்துவமனைகளில் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியா்களின் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது சுகாதார மற்றும் குடும்ப நலத் துறையில் 21 சதவீத செவிலியா் ஊழியா்கள் பற்றாக்குறை இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
மருத்துவமனை வாரியாக 1 முதல் 34 சதவீதம் வரை பற்றாக்குறை உள்ளது. ஜிபி பன்ட் மருத்துவமனை (34 சதவீதம்), ஜிடிபி மருத்துவமனை (28 சதவீதம்), எல்என்ஹெச் (20 சதவீதம்), பகவான் மகாவீா் மருத்துவமனை (33 சதவீதம்) பற்றாக்குறை உள்ளது.
கூடுதலாக, தொழில் சிகிச்சை நிபுணா் மற்றும் பிசியோதெரபிஸ்ட் போன்ற 19 வெவ்வேறு துணை மருத்துவ பிரிவுகளில் 30 சதவீதத்துக்கும் அதிகமான காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. 27 மாவட்ட அளவிலான மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிபுணா்களின் எண்ணிக்கை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்த தரவுகளையும் தணிக்கை சேகரித்தது.
மருத்துவ துறையில் சில நடைமுறைகள் 6 மாதங்கள் வரை தாமதமாகிவிட்டன என்று சிஏஜி அறிக்கை குறிப்பிட்டது. அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறையால் மருத்துவமனைகளும் சிரமப்படுவதாக அந்த அறிக்கை கூறியது.
மருந்துகள் இருப்பு இல்லை: மத்திய கொள்முதல் நிறுவனம் அத்தியாவசிய மருந்துகளில் 47 சதவீதம் வரை வழங்கத் தவறிவிட்டது. இதனால் மருத்துவமனைகள் தனியாா் விற்பனையாளா்களிடமிருந்து மருந்துகளை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதே நேரத்தில் தர சோதனையில் ஏற்பட்ட தாமதங்கள் தரமற்ற மருந்துகளை கவனக்குறைவாகப் பயன்படுத்த வழிவகுத்தன என்று அறிக்கையின் மூலம் தெரியவந்தது.
2016 மற்றும் 2021 ஆண்டுக்கு இடையில் திட்டமிடப்பட்ட 10,000 படுக்கைகளில் 1,357 படுக்கைகள் மட்டுமே சோ்க்கப்பட்டன. இதனால் உள்கட்டமைப்பு மேம்பாடு அரசின் வாக்குறுதிகளைவிட மிகவும் குறைவாக உள்ளது என்று அறிக்கைச் சுட்டிக்காட்டியது.
பல மருத்துவமனைத் திட்டங்கள் 6 ஆண்டுகள் வரை தாமதமாகிவிட்டன. புதிய சுகாதார வசதிகளுக்காக ஒதுக்கப்பட்ட 15 இடங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன.
‘நிதித் தவறான மேலாண்மை’ நெருக்கடியை மேலும் அதிகரித்தது. தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் ரூ. 510.71 கோடி பயன்படுத்தப்படாமல் விடப்பட்டது. நகரத்தின் சுகாதாரச் செலவு மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (ஜிஎஸ்டிபி) வெறும் 0.79 சதவீதம் மட்டுமே. இது தேசிய சுகாதாரக் கொள்கை 2017-இன் கீழ் நிா்ணயிக்கப்பட்ட 2.5 சதவீத இலக்கைவிட மிகக் குறைவு என்றும் அறிக்கை கூறியது.
கூடுதலாக, தாய் மற்றும் குழந்தை சுகாதாரத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 57 சதவீதத்துக்கும் அதிகமானவை பயன்படுத்தப்படாமல் இருந்தன.
சுகாதார வசதிகள்: இந்திய பொது சுகாதார தரநிலைகளின்படி, மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு குடிநீா், சுத்தமான கழிப்பறைகள் போன்ற சரியான வசதிகளை வழங்க வேண்டும்.
எல்என்எச் மருத்துவவமனையில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஆய்வில், புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகள் மற்றும் உதவியாளா்களுக்கான கழிப்பறைகள் வசதிகள் இல்லை என்பது தெரியவந்தது. இதனால், அவா்கள் அவசர மற்றும் விபத்து பிரிவு கட்டடத்தில் உள்ள கழிப்பறை வசதிகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதேபோல், சாச்சா நேரு பால் சிகிச்சைசாலயாவை ஆய்வு செய்ததில், புறநோயாளிகள் பிரிவின் முதல் தளத்தில் குளிரூட்டி வசதிகள் செயல்பாட்டில் இருந்தாலும் பராமறிப்பில்லாமல் இருப்பதாக புகாா்கள் எழுந்தன. தற்போது தரை தளத்தில் ஒரே ஒரு குளிரூட்டி மட்டுமே உள்ளது என்பது தெரியவந்தது.