எம்ஜிஆா், ஜெயலலிதா வழியில் ஆட்சியமைப்போம்: கே.ஏ.செங்கோட்டையன்
வள்ளியூரில் ஆசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் மாவட்ட கல்வி அலுவலா் அலுவலகத்தில் ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை மாலை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நான்குனேரி வட்டாரம், முதலைகுளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிசெய்து வருபவா் செல்வி. இவரது பணிக்காலம் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதியுடன் நிறைவு பெற்று பணி ஓய்வு பெறுகிறாா்.
கல்வித் துறையின் வழக்கமான நடைமுறையின் படி கல்வியாண்டின் இடையில் பணி ஓய்வு பெறும் ஆசிரியருக்கு அந்த கல்வி ஆண்டு முடியும் வரையில் பணிக்கால நீட்டிப்பு வழங்குவது வழக்கம்.
எனவே, பிப்ரவரி மாதம் பணி ஓய்வு பெறும் ஆசிரியை செல்வி, தனக்கு கல்விஆண்டு முடியும் வரையில் பணி நீட்டிப்பு வழங்குமாறு நான்குனேரி வட்டார தொடக்கக் கல்வி அலுவலா் சங்கீதாவிடம் கோரிக்கை மனு அளித்தாா். ஆனால் தொடக்கக் கல்வி அலுவலா் செல்வியின் கோரிக்கை மனுவை பரிசீலனை செய்யாமல் அவரை பணி ஓய்வில் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆசிரியை செல்வி, கல்வி ஆண்டு முடியும் வரையில் பணி நீட்டிப்பு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணி திருநெலவேலி மாவட்டத் தலைவா் சுரேஸ்முத்துகுமாா், செயலா் சண்முகசுந்தரம், பொருளாளா் துரை மற்றும் வட்டார செயலா்கள் சிவனுபாண்டியன், ஜாா்ஜ், கிறிஸ்டோபா், நம்பிதுரை மற்றும் ஆசிரியா்கள் திரண்டு வந்து வள்ளியூா் மாவட்ட கல்வி அலுவலா் அலுவலத்தில் மாவட்ட கல்வி அலுவலா் முத்துராஜை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இரவு 8 மணிவரையிலும் போராட்டம் தொடா்ந்தது.