மும்பை தமிழ்ச்சங்கத்தில் சர்வதேச மகளிர் தினம்; அவள் விகடனுடன் சேர்ந்து கொண்டாடிய தமிழ் பெண்கள்
மும்பை தமிழ்ச்சங்கத்தில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. தமிழ்ச்சங்கமும், அவள் விகடனும் இணைந்து நடத்திய இந்த விழாவில் மும்பை முழுவதும் இருந்து இளம்பெண்கள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர்.
விழாவின் தொடக்கத்தில் பெண்கள் பாரம்பர்ய விளையாட்டுக்களான பல்லாங்குழி, பரமபதம் மற்றும் தாயம் விளையாடி மகிழ்ந்தனர். அதனை தொடர்ந்து 3 வயதில் சர்வதேச அளவில் பொது அறிவுத்திறன் போட்டிகளில் கலந்து கொண்டு ஏராளமான விருதுகளை பெற்ற சமர்த்தா மகாலட்சுமி கெளரவிக்கப்பட்டார்.

3 வயது சிறுமி சமர்த்தா மகாலட்சுமி மேடையில் எந்த வித தயக்கமும் இல்லாமல் கேட்ட கேள்விகளுக்கு உடனுக்குடன் பதிலளித்தது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து வந்திருந்த சந்தரி என்பவர் யோகாவின் முக்கியத்துவம் குறித்து பேசினார். பின்னர் பெண்கள் கலந்து கொண்ட மாறுவேடப்போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில், கண்ணகி, சாவித்ரி பாய்புலே, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ஒளவையார், வேலு நாச்சியார், நிர்மலா சீதாராமன் வேடம் அணிந்த பெண்கள் பார்வையாளர்களுக்கு ஆச்சரியம் கொடுத்தனர்.

ஒவ்வொருவரும் மாறுவேடம் அணிந்து வரும்போது அவர்களின் வாழ்க்கை குறித்த விளக்கம் கொடுக்கப்பட்டது. பின்னர் சொல்விளையாட்டுப்போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் ஒன்பது அணிகள் கலந்து கொண்டன. சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் உற்சாகத்துடன் இப்போட்டியில் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து ஒரே நேரத்தில் 5 திரைப்பட கதாநாயகிகளின் பாடல்களுக்கு புவனா வெங்கட் நடனம் ஆடினார்.

போட்டியைத் தொடர்ந்து செளமியா தம்பதி நடத்திய பாட்டுக்கு பாட்டு போட்டி நடந்தது. இப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், விகடன் வெளியீடான `சேமிப்பு முதலீடு தகவல் களஞ்சியம்' புத்தகமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை சோபனா வாசுதேவன், சுந்தரி வெங்கட் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

சங்கத்தின் தலைவர் ராம்தாஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அவள் விகடனுடன் இணைந்து முதல் முறையாக மகளிர் தின விழா கொண்டாடுவது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மிகவும் மகிழ்ச்சி தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் மகளிர் பிரிவை சேர்ந்தவர்கள் இணைந்து செய்திருந்தனர்.