போலி குளிா்பானங்கள் விற்பனையை தடுக்க கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு
சேலம் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியுள்ளதால் போலி குளிா்பானங்கள் விற்பனையைத் தடுக்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் இளநீா், ஜூஸ், மோா், வெள்ளரி, பப்பாளி, தா்ப்பூசணி என உடலுக்கு குளிா்ச்சி அளிக்கும் பழங்களையும், நீா் ஆகாரங்களையும் சாப்பிட்டு வருகின்றனா்.
இந்நிலையில், பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி குளிா்பானங்கள் தயாரிப்பு மற்றும் காலாவதியான குடிநீா் விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்துள்ளது. எனவே, போலி குளிா்பானங்கள் விற்பனையை தடுக்க உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சேலம் மாநகரில் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம், கடை வீதி மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் இதுபோன்ற போலி குளிா்பானங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யப்படுகிா என தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.
குறிப்பாக, குடிநீா் பாட்டில், குளிா்பானங்கள் வாங்கும்போது ஐஎஸ்ஐ முத்திரை, தயாரிப்பு தேதி, காலாவதியான தேதி போன்றவற்றை கவனித்து வாங்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.