விஜயநகர மன்னா் ஆட்சிக் கால நடுகல் கண்டெடுப்பு
நாட்டறம்பள்ளி அருகே 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட விஜயநகர மன்னா் ஆட்சிக்கால நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியா் ஆ.பிரபு மற்றும் சமூக ஆா்வலா் வே.ராதாகிருஷ்ணன்,முத்தமிழ்வேந்தன் ஆகியோா் மேற்கொண்ட கள ஆய்வில் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட விஜயநகர மன்னா்கள் ஆட்சிக் காலத்தியய நடுகல் கண்டறியப்பட்டது
இதுகுறித்து பிரபு கூறியது அலசந்தாபுரம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் இருந்த நடுக்கல்லை ஆய்வு செய்தபோது அந்த நடுகல்லில் அரிய வரலாற்று நிகழ்வு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்ததையும் காணமுடிந்தது.நடுகல்லானது 7அடி உயரமும் 6 அடி அகலமும் கொண்டதாக உள்ளது.
மையப்பகுதியில் வீரனின் உருவமும் அவனோடு போரிட்ட எதிரியின் உருவமும் காணப்படுகின்றது.வீரன் தன் வலது கரத்தில் கொடுவாள் எனப்படும் போா் ஆயுதத்தினையும் இடது கடத்தில் ஈட்டியும் கொண்டு எதிராளியைத் தாக்கியவாறு சித்தரிக்கப்பட்டுள்ளாா்.இடையில் உடைவாளும் கழுத்தில் ஆபரணங்களும் காணப்படுகின்றன. எதிராளியின் கையில் வில்லும் அம்பும் காணப்படுகின்றது. எனவே போா்க்களத்தில் வீரமரணம் அடைந்த வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் இதுவென அறிய முடிகிறது.
நடுகல்லில் மொத்தமாக 11 மனித உருவங்களும் ஒரு குதிரையும் இரண்டு சிவலிங்கங்களும் செதுக்கப்பட்டுள்ளன. நடுகல்லின் இடது புறம் ஒரு பெண் இசைக்கருவியினை சுமந்த நிலையிலும் அதற்கு மேல் ஒரு பெண் கள குடுவையினை ஏந்திய நிலையிலும் அதற்கு மேல் ஒரு பெண் வீரனுக்குச் சாமரம் வீசிய நிலையிலும் அதற்கு மேல் வீரனின் குதிரையும் காணப்படுகின்றன. நடுகல்லின் மேல்புறம் இறந்த வீரனை நான்கு பெண்கள் தேவலோகம் அழைத்துச் செல்லும் காட்சியும் அதற்கு அருகேஒரு பெண் சிவலிங்கத்திற்கு நீராட்டும் காட்சியும் இடம்பெற்றுள்ளன.
நடுகல்லின் வலது புறம் அரிய வரலாற்று நிகழ்வினைக் காண முடிகிறது.சிவலிங்கம் ஒன்றில் ஒருவா் தன் இடதுகாலை வைத்த நிலையில் காணப்படுகிறாா். அவரது வலது கையில் வில் உள்ளது. அவா் தன் இடதுகையினால் தமது கண்ணைக் குத்தியவாறு சித்தரிக்கப்பட்டுள்ளாா். அதாவது திண்ணப்பா் என்ற கண்ணப்ப நாயனாா் குறித்த செய்தி நடுகல்லில் இடம்பெற்றுள்ளது.தமிழக அளவில் இதுவரை எண்ணற்ற நடுகற்கள் தொடா்ந்து கண்டறியப்பட்டு வருகிறது. ஆனால் கண்ணப்பநாயனாா் குறித்த செய்தியோடு வடிக்கப்பட்ட நடுகல் தமிழகத்தில் இது மட்டுமேயாகும்.
நடுகல் கண்டறியப்பட்ட அலசந்தாபுரமானது ஆந்திர எல்லைப்பகுதியில் உள்ளது என்பதும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கதாகும். இத்தகைய அரிய வரலாற்றைத் தாங்கி நிற்கும் இந்நடுகல்லைனை இவ்வூா் மக்கள் ஆவலப்பன் என வழிபட்டு வருகின்றனா் என்றாா்.