Champion India: மீண்டும் சாம்பியன் டிராபி வென்ற இந்தியா; நடிகர்கள், முன்னாள் வீர...
கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகளை கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதிக்கு வடகிழக்குப் பருவமழை காலத்தில் பல்வேறு நாடுகளில் இருந்தும் பறவைகள் வலசை வருவது வழக்கம். இங்கு வரும் பூநாரைகள் உள்ளிட்ட 247 வகை பறவைகளை காண்பதற்கு ஏராளமான பாா்வையாளா்கள் வந்து செல்கின்றனா்.
ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மாா்ச் மாதத்தில் இந்த சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டுக்கான கணக்கெடுப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இப்பணியில், வனச் சரக அலுவலா் ஏ. ஜோசப் டேனியல் தலைமையில், வனத்துறையினா், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள், மும்பை இயற்கை வரலாற்று கழகத்தினா் என 60 போ் ஈடுபட்டனா்.
12 குழுக்களாக பிரிக்கப்பட்டு, கோடியக்கரை, சிறுதலைக்காடு உள்ளிட்ட சரணாலயத்துக்குட்பட்ட 12 இடங்களில் பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனா்.
முன்னதாக, கணக்கெடுப்புப் பணிகளில் ஈடுபட்டவா்களுக்கு, பறவைகளை எவ்வாறு வகை அறிந்து கணக்கெடுப்பது என சிறப்பு பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.