சூப்பர் முதல்வர் பேச்சைக்கேட்டு தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு: தர்மேந்திர பிரதான்
சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு தேசியக் கல்விக் கொள்கயில் கையெழுத்திடாமல் தவிர்த்திருக்கிறது தமிழகம் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டியுள்ளார்.
மார்ச் மாதம் முடிய இன்னும் சில நாள்கள் இருக்கிறது. மத்திய அரசும் தெளிவாகவே இருக்கிறது. தமிழக அரசுடன் கடந்த மாதங்களில் பல கட்ட விவாதங்களை நடத்தியிருக்கிறோம். அவர்கள் நிலைப்பாட்டை கடந்த ஒரு சில மாதங்களில் மாற்றியிருக்கிறார்கள். பிஎம்ஸ்ரீ பள்ளிகள் தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்தது.
திமுக எம்பிக்கள் வந்து என்னை சந்தித்தனர். தமிழக கல்வித் துறை அமைச்சருடன் வந்திருந்தார்கள். அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். ஆனால், அப்போது ஒப்புதல் கொடுத்துவிட்டு சென்று, இப்போது பிரச்னையை ஏற்படுத்துகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அதன்படி, பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யு-டர்ன் போட்டது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரதான் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கூட உதாரணமாக கர்நாடகத்திலும், தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. தேசியக் கல்விக் கொள்கை மூலம் ஹிந்தி திணிக்கப்படுவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது என்றும் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதிலை ஏற்க மறுத்து திமுக எம்.பி.க்கள் தொடர் முழக்கத்தில் ஈடுபட்டு வந்தனர். அமளிக்கு இடையே பிரதான் தொடர்ந்து தனது உரையை ஆற்றினார்.
பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர்வதாக என்னிடம் கூறிய நிலையில் நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? தேசியக் கல்விக் கொள்கை திட்டத்தில் கையெழுத்திட தமிழக முதல்வர் முன்வந்தார். ஆனால், சூப்பர் முதல்வர் அதனைத் தடுத்துவிட்டார். தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை தமிழக அரசு வஞ்சிப்பதாகவும் எந்த சூப்பர் முதல்வர் சொன்னதைக் கேட்டு, கையெழுத்திட மறுத்ததாகவும் தர்மேந்திர பிரதான் கேள்வி எழுப்பியிருந்தார்.