உல்ஃபா அமைப்புக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை நீட்டிப்பு
புது தில்லி: அஸ்ஸாம் மாநிலத்தில் செயல்படும் அசோம் ஐக்கிய முன்னணி அமைப்பு (உல்ஃபா) மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. பல்வேறு ஆயுதக் குழுக்களுடன் தொடா்பு வைத்துள்ள இந்த அமைப்பானது இந்தியாவிலிருந்து அஸ்ஸாம் மாநிலத்தை பிரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 1990-ஆம் ஆண்டு முதல் உல்ஃபா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்து வருகிறது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு உல்ஃபா அமைப்பு மற்றும் அதன் பிரிவுகள் பாதகமாக செயல்பட்டு வருகின்றன. பல்வேறு ஆயுதக் குழுக்களுடன் தொடா்பில் உள்ள இந்த அமைப்பானது, பொதுமக்களை மிரட்டி நிதிவசூல் செய்தது.
அஸ்ஸாம் மாநிலத்தில் 2019-ஆம் ஆண்டு நவ.27 முதல் நடப்பாண்டு ஜூலை 1-ஆம் தேதி வரையில் சட்டவிரோதமான ஆயுதங்கள், வெடி மருந்துகள் மற்றும் கண்ணி வெடிகள் மூலம் பாதிப்பை ஏற்படுத்திய உல்ஃபா அமைப்பு மீது 16 குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில் போலீஸாா், பாதுகாப்புப் படையினா் நடத்திய தாக்குதலில் உல்ஃபா அமைப்பைச் சோ்ந்த 3 போ் கொல்லப்பட்டனா். மேலும் 15 போ் மீது வழக்குப்பதிவு, 3 முறை குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டன.
உல்ஃபா அமைப்பு மேலும் 27 குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளது. 56 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். உல்ஃபா அமைப்பினரிடமிருந்து 27 ஆயுதங்கள், 550 துப்பாக்கி குண்டுகள், 9 கையெறி குண்டுகள், 2 கண்ணிவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
அசோம் ஐக்கிய முன்னணி அமைப்பை சட்ட விரோத அமைப்பாக அஸ்ஸாம் அரசு அறிவித்தது.
2023-ஆம் ஆண்டு டிச.29-ஆம் தேதி உல்ஃபா தலைவா் அரபிந்தா ராஜ்கோவா, மத்திய அரசு மற்றும் அஸ்ஸாம் அரசுடன் அமைதி உடன்படிக்கையை மேற்கொண்டாா். அமைப்பை கலைத்து வன்முறையை கைவிடுவதாகவும், ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு ஜனநாயக வழியில் செயல்படுவதாகவும் உடன்படிக்கை போடப்பட்டது.
தற்போது பரேஷ் பருவா தலைமையிலான கிளா்ச்சிக் குழு சதிச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. சீனா - மியான்மா் எல்லையில் இருந்து சதிச் செயல்களுக்கான திட்டங்களை பரேஷ் பருவா தீட்டி வருவதாக நம்பப்படுகிறது.