உ.பி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு நாளில் சாக்கு மூட்டையில் தலித் பெண் சடலம்; நடந்தது என்ன?
உத்தரப்பிரதேசத்தில் கதேஹாரி, கர்ஹால், மீராபூர், காசியாபாத், மஜவான், சிசாமாவ், கைர், புல்பூர் மற்றும் குந்தர்கி பகுதிகளில் இன்று காலை இடைத்தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில், கர்ஹால் தொகுதியில் தலித் பெண் ஒருவர் சாக்கு மூட்டையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்தையடுத்து, உயிரிழந்த பெண்ணின் தந்தை சமாஜ்வாதி கட்சியினர் மீது போலீஸில் புகாரளித்திருக்கிறார்.
அந்தப் புகாரின்படி, மூன்று நாள்களுக்கு முன்னர் சமாஜ்வாதி கட்சியின் பிரசாந்த் யாதவ், அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று, யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். அதற்கு, பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தனது குடும்பத்துக்கு வீடு கிடைத்ததால், பா.ஜ.க-வின் சின்னமான தாமரைக்கு வாக்களிப்பேன் என்று அவர் பதிலளித்தார். இதனால் அவரை மிரட்டிய பிரசாந்த் யாதவ், சமாஜ்வாதியின் சைக்கிள் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கூறிச் சென்றிருக்கிறார்.
இந்த நிலையில்தான், அந்தப் பெண் இன்று சடலமாகக் கண்டெடுக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்து, பெண்ணை தந்தை அளித்த புகாரின் பேரில், பிரசாந்த் யாதவ் மற்றும் மோகன் கத்தேரியா ஆகியோரைப் போலீஸார் கைது செய்திருக்கின்றனர். இது குறித்துப் பேசிய மெயின்புரி மாவட்ட காவல்துறைத் தலைவர் வினோத் குமார், ``பா.ஜ.க-வுக்கு வாக்களிப்பதாகக் கூறியதால், குற்றம்சாட்டப்பட்டவர்களால் அவர் கொல்லப்பட்டிருக்கிறார் எனப் பெற்றோர் புகாரளித்திருக்கின்றனர்" என்றார் கூறியிருக்கிறார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பா.ஜ.க மாநில தலைவர் பூபேந்திர சிங் சவுத்ரி, கர்ஹாலில், சமாஜ்வாதி கட்சியின் பிரசாந்த் யாதவ் மற்றும் அவரது உதவியாளர்கள், `` 'சைக்கிளுக்கு' வாக்களிக்க மறுத்த ஒரு தலித் பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்தனர்" என்று ட்வீட் செய்திருக்கிறார். மறுபக்கம், கர்ஹால் தொகுதி சமாஜ்வாதி வேட்பாளர் தேஜ் பிரதாப் யாதவ், முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகள் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...