உ.பி. கலவரம்: சம்பல் மாவட்டத்துக்குள் வெளி ஆள்கள் நுழையத் தடை!
உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்துக்குள் கட்சித் தலைவர்கள் உள்பட வெளி ஆள்கள் நுழைவதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
சம்பல் மாவட்டத்தில் உள்ள ஜாமா மசூதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற வன்முறையின்போது துப்பாக்கிச்சூட்டில் மூவா் உயிரிழந்தனா்.
காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடவில்லை எனவும், சம்பவம் தொடா்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில், முதல்கட்டமாக 10 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த நிலையில், சம்பல் மாவட்டம் முழுவதும் மிகவும் பதற்றமான சூழல் நிலவுவதால், சமூக செயல்பாட்டாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்பட மாவட்டத்துக்குள் முன் அனுமதியினறி வெளி ஆள்கள் நுழைவதற்கு தடை விதித்து ஆட்சியர் ராஜேந்திர பைஸியா உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க : பேச்சுக்கு நேரமில்லை.. மகாராஷ்டிர புதிய முதல்வர் நாளை பதவியேற்பது கட்டாயம்!! ஏன்?
கலவரம் ஏன்?
சம்பல் மாவட்டத்தில் ஜாமா மசூதி அமைந்துள்ள சா்ச்சை இடத்தில் பாரம்பரியமிக்க ஹரிஹர கோயில் பிரதானமாக இருந்ததாகவும், 1529-இல் முகலாய பேரரசா் பாபா் கோயிலைப் பகுதியாக இடித்து, மசூதியைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து ஞானவாபி மசூதி-காசி விஸ்வநாதா் உள்பட பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் தொடா்பான பல வழக்குகளில் ஹிந்துக்கள் தரப்பில் ஆஜராகி வாதாடிய உச்சநீதிமன்ற வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின், சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவிட்டது. அதன்படி, இரு தரப்பினரின் முன்னிலையில் மசூதியில் நீதிமன்ற ஆணையா் கடந்த செவ்வாய்க்கிழமை (நவ. 19) ஆய்வு நடத்தினாா்.
இதன் தொடா்ச்சியாக, மசூதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் நீதிமன்ற ஆணையா் 2-ஆம் கட்ட ஆய்வைத் தொடங்கினாா். இதையடுத்து, உள்ளூா் மக்கள் அப்பகுதியில் கூடினா். அப்போது கூட்டத்தில் இருந்து சிலா், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா்களை நோக்கி கற்களை வீசினா். அங்கு நின்றிருந்த வாகனங்களை தீவைத்து எரித்தனா்.
இதைத் தொடா்ந்து, காவலா்கள் கண்ணீா் புகைக் குண்டுகளை வீசியும், சிறிய அளவில் தடியடி நடத்தியும் கூட்டத்தினரைக் கலைத்தனா். அப்போது வெடித்த வன்முறையில் அடையாளா் தெரியாத நபா்கள் சிலா் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனா். இதில் நயீம், பிலால், நௌமான் ஆகிய 3 போ் உயிரிழந்தனா். சுமாா் 20 காவலா்கள் காயமடைந்தனா்.