எங்கள் பந்துவீச்சை ஹர்மன்பிரீத் கௌர் அடித்து நொறுக்குவார்; நினைவுகளைப் பகிர்ந்த ...
ஊழலுக்கு எதிரான பராசக்தி... சக்தித் திருமகன் - திரை விமர்சனம்!
நடிகர் விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
மயிலாடுதுறையில் பிறக்கும் கிட்டு (விஜய் ஆண்டனி) என்கிற ஒரு ஆள், இந்திய அரசே திரும்பிப் பார்க்கும் விஷயத்தைச் செய்கிறார். அதாவது, இந்த அரசியல்வாதிகள் செய்த ஊழல்களுக்கு எதிராகக் கொந்தளிக்கும் நாயகனின் கதை. இன்னும் சொன்னால், பல நரிகளால் வளர்க்கப்படும் புலியின் கதை. அப்புலி, ஒருநாள் நூற்றுக்கணக்கான நரிகளுக்கு எதிராக நின்றால் என்ன ஆகும் என்கிற கதையே சக்தித் திருமகன்.
அருவி, வாழ் ஆகிய திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் நம்பிக்கையான இயக்குநர் எனப் பெயரெடுத்த அருண் பிரபு புருஷோத்தமன் சக்தித் திருமகன் மூலம் மீண்டும் அந்த நம்பிக்கையை உறுதிசெய்துள்ளார். ஊழலுக்கு எதிராக தமிழ் சினிமா நிறைய திரைப்படங்களை உருவாக்கிவிட்டது. ஆனால், அக்கதைகள் அன்றைய காலகட்ட அரசியல் சித்தாங்களுடன் கூடிய வெளிப்படையான அநீதிகளைப் பெரிதாக முன்வைக்கவில்லை.
அந்தக்குறைகளை நீக்கி, அப்பட்டமாக இன்றைய இருதுருவ அரசியலை முன்வைத்து மிகப்பெரிய அரசியல் ஆலோசகர்களால் நாடு என்னென்ன நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது என்பதையும் அரசு அதிகாரங்களில் உள்ளவர்களின் ஊழல்களால் தனிமனிதர்கள் சந்திக்கும் அவலமும் காட்சிக்குக் காட்சி சக்தித் திருமகனில் பேசப்பட்டிருக்கிறது.
முக்கியமாக, லஞ்சம் மற்றும் ஊழல்களால் கருப்புப் பணத்தை வைத்திருக்கிறவர்களின் நம்பிக்கைகளைச் சம்பாதிப்பதிலிருந்து அந்த செயல்களுக்கு எதிராகத் திரும்பும் வரையிலான கதையில் எந்த இடத்திலும் பிசிறு தவறுகூட நடக்காமல் பார்த்திருக்கிறார் இயக்குநர் அருண் பிரபு. 2.40 மணிநேரம் கொண்ட படத்தில் திரைக்கதை பறக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இப்படியான கதையை, இந்த வேகத்தில் சொன்னால்தான் இதன் அழுத்தம் சரியாகக் கடத்தப்படும் என்கிற ‘மீட்டர்’ வரை நுட்பமாக வேலை செய்திருக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளில் வெளியான தமிழ் கமர்சியல் படங்களிலேயே பரபரப்பான திரைக்கதையில் வென்றது சக்தித் திருமகனாகத்தான் இருக்கும். இடைவேளையில் இருக்கும் எதிர்ப்பார்ப்பு இறுதிவரை குறையவுமில்லை. ரூ. 6000 கோடி சம்பாதித்த விஜய் ஆண்டனியின் சூழ்ச்சிகள், பெரியாரிஸ்ட் வாகை சந்திரசேகரின் காட்சிகள் உள்ளிட்டவை சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளன.
கதை, திரைக்கதையின் பங்களிப்பு ஒருபுறம் என்றால் படத்தின் மிகப்பெரிய பலமே வசனங்கள்தான். ஒவ்வொன்றும் கத்தியின் கூர்போல காட்சிக்கு பலம் சேர்க்கின்றன. முக்கியமாக, ‘குரங்கிலிருந்து எப்படி மனிதன் வந்தான் என்பதைவிட எதற்காக வந்தான் என யோசி’, ’ஒரு ஐபிஎல் போட்டி போதும் மக்கள் ஊழலை மறப்பதற்கு’, ‘மக்கள் எப்போதும் எதாவது ஒருவர் நடிகர் நம்மைக் காக்கமாட்டாரா என்றுதான் நினைப்பார்கள்’ என்பது உள்ளிட்ட வசனங்கள் இன்றைய அரசியலுடன் தொடர்புப்படுத்தும்போது வலு பெறுகின்றன.
அதேநேரம், விஜய் ஆண்டனியின் சண்டைக் காட்சிகள் அழுத்தத்தைத் தராததும் இரண்டாம்பாதியில் சில காட்சிகளும் பலவீனமாகத் தெரிந்தன. முக்கியமாக, சரியான ஆதங்கத்திற்காக 17 வயது சிறுவனைக் கொலைக்கு பயன்படுத்துவது சரியானதாகத் தோன்றவில்லை.
சமகால பிரச்னைகளைத் திரையில் பேசும் கதைகளில் அதிகம் நடிக்கும் விஜய் ஆண்டனி சக்தித் திருமகன் மூலம் பெரிய பாய்ச்சலாக பாய்ந்திருக்கிறார். அவருடைய வழக்கமான வணிகத்தைத் தாண்டி அதிகம் செலவளித்தது கதை மீதான அவருக்கு இருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது. ஊழல்வாதிகளுக்கு உதவி செய்ய இடைத்தரகராக இருக்கும் கதாபாத்திரத்திலிருந்து அவர்களுக்கு எதிரான நாயகனாகவும் வரையிலான பரிணாமத்தில் விஜய் ஆண்டனியின் முதிர்ச்சி தெரிகிறது. நடிகர் விஜய் ஆண்டனிக்கு பிச்சைக்காரன் படத்திற்குப் பின் முக்கியமான திரைப்படமாக சக்தித் திருமகன் இருக்கும்.
காதல் ஓவியம் படத்தில் நடித்த நடிகர் கண்ணன் இப்படத்தில் அபயங்கர் என்கிற கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். அவர் வரும் காட்சிகளும் பேசும் ஆங்கில வசனங்களும் அவரை நிஜ அரசியல் ஆலோசகராகவே மாற்றுகிறது. தமிழ் சினிமாவுக்கு புதிய வில்லன். அதேபோல், நடிகர்கள் செல் முருகன், வாகை சந்திரசேகர் உள்ளிட்டோரும் கச்சிதமான தேர்வுகள்.
உருவாக்க ரீதியிலும் நல்ல மேக்கிங்கை கொடுத்திருக்கின்றனர். எங்கும் குறையாத விறுவிறுப்பான ஒளிப்பதிவுக்கும் எடிட்டிங்குக்கும் கூடுதல் பாராட்டுகள். விஜய் ஆண்டனியின் பின்னணி இசையும் முதல் பாடலும் ரசிக்க வைக்கிறது. படத்தின் கலை இயக்குநர் பிளாஷ்பேக் காட்சிகளுக்கு சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கிறார்.
இப்படத்திற்கு, முதலில் பராசக்தி என்றே பெயர் வைத்திருக்கின்றனர். அத்தலைப்பு வேறொரு படத்திற்குச் சென்றுவிட்டது. பராசக்தியே இப்படத்திற்கு சரியான பெயராக இருந்திருக்கும். புதிய தலைமுறைக்கான அரசியல் புரிதல்களைப் பேசும் படமாகவும் ஊழல்களுக்கு எதிரான குரலை அழுத்தமாக முன்வைத்ததிலும் சக்தித் திருமகன் தனித்து மிளிர்கிறார். சும்மா ஒரு கமர்சியல் படத்தைக் கொடுக்கலாம் என நினைக்காமல் சரியான கருத்தை சமரசமில்லாமல் பேசியதற்காக நடிகர் விஜய் ஆண்டனிக்கும் இயக்குநர் அருண் பிரவுக்கும் பாராட்டுகள்.
இதையும் படிக்க: பழங்குடியினர் வலி! ராமாயணத்திலிருந்து நவயுகம் வரை... தண்டகாரண்யம் - திரை விமர்சனம்!