புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியில் இணைந்த தமிழக வீரர்!
புரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் அணியில் தமிழக வீரர் ஒருவர் இணைந்துள்ளார்.
புரோ கபடி லீக் தொடரின் 12-வது சீசன் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதற்கட்ட லீக் ஆட்டங்கள் செப்டம்பர் 11-ந் தேதி வரை விசாகப்பட்டினத்திலும், அடுத்த கட்ட ஆட்டங்கள் முறையே ஜெய்ப்பூர் (செப்.12-27), சென்னை (செப்.29- அக்.10), தில்லி (அக்.11-23) ஆகிய நகரங்களிலும் நடைபெறவுள்ளன.
இந்தத் தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் தில்லி கே.சி., குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் யுபி யோதாஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்றுள்ளன.
இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 3 போட்டிகளிலும் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்து 6 புள்ளிகளுடன் 7 வது இடத்தில் உள்ளது.
கடந்த மாதம் தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக பவன் செஹ்ராவத் நியமிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது அணியை விட்டு வெளியேறினார். இது அணிக்கு மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்பட்டது.
மேலும், தடுப்பாளர் சாகர் ராதியும் காயம் காரணமாக விலகினார். இதனால், அவருக்குப் பதிலாக தற்போது தமிழகத்தைச் சேர்ந்த அருள்நந்த பாபு தமிழ் தலைவாஸ் அணியில் இணைந்துள்ளார்.
தமிழ் தலைவாஸ் அணியில் தமிழக வீரர் யாரும் இல்லை என விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது இந்த சீசனில் முதல் தமிழக வீரராக அருள்நந்த பாபு அணியில் இணைந்துள்ளார்.
கடந்தாண்டு பெங்களூரு புல்ஸ் அணிக்காக விளையாடி அருள்நந்த பாபு, இதுவரை 17 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.