ரோபோ சங்கர் உடல் தகனம்! அரசியல், திரைப் பிரபலங்கள் இறுதி அஞ்சலி!
நடிகர் ரோபோ சங்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் உடல், வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கின்போது ஏராளமான திரைக் கலைஞர்கள், சின்னத்திரை கலைஞர்கள், பொது மக்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் கலந்துகொண்டு அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் நகைச்சுவை நட்சத்திரமாக குறுகிய காலத்திலேயே ஜொலித்த ரோபோ சங்கர், சென்னையில் கௌதம் மேனன் - தர்ஷனின் காட்ஜில்லா படப்பிடிப்பில் இருந்தபோது மயக்கமடைந்து செப்.16 ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரது உடல் நிலை மேலும் மோசமானதால் பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார்.
அவரது உடல் வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன், நடிகர்கள் சத்யராஜ், தனுஷ், சிவகார்த்திகேயன், ராதா ரவி, எம்.எஸ்.பாஸ்கர், பாண்டியராஜன், எஸ்.ஏ.சந்திரசேகர், சினேகன், செந்தில் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், அவரது இறுதி ஊர்வலத்தில் நடிகர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
நடிகர்கள் விஜய் ஆண்டனி, இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அவருடன் இணைந்து நடித்த சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
ரோபோ சங்கரின் உடல் இன்று மாலை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, பிருந்தாவன் நகரில் உள்ள மின் மயானத்தில் ரோபோ சங்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் கணவர் கார்த்திக் இறுதிச் சடங்குகளைச் செய்தார். அவரது மனைவி பிரியங்கா கண்ணீருடன் நடனமாடி பிரியாவிடை கொடுத்தார்.