`எகிப்த்தில் திரையிடப்பட்ட முதல் தமிழ் சினிமா வீரபாண்டிய கட்டபொம்மன்தான்' - பி.ஆ...
`என்னை சோதிக்காதீர்கள்; எத்தனையோ பதவிகள் தேடி வந்தன ஆனால்...' - மேடையில் வெடித்த செங்கோட்டையன்
அத்திக்கடவு-அவிநாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமிக்கு அன்னூரில் கடந்த 9-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளைம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்தார். "இந்த விழா தொடர்பான அழைப்பிதழ்கள் மற்றும் மேடையில், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெறாத நிலையில், எனது உணர்வை வெளிப்படுத்தும் வகையில் விழாவில் பங்கேற்கவில்லை” என்று செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.
இந்தப் பிரச்னை தொடர்பாக அதிமுக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான விவாதங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதற்கிடையே அதிமுக நிர்வாகிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் செங்கோட்டையனை காண அவரது இல்லத்தில் நேற்று குவிந்தனர். இதனால் அதிமுக வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பேசிய செங்கோட்டையன், “அந்தியூர் பகுதியில் நடைபெற இருக்கும் எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக் கூட்டத்திற்கு அழைப்பிதழ்கள் வழங்க அதிமுக நிர்வாகிகள் வந்துள்ளனர். ஆலோசனைக் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. தினமும் அதிமுக நிர்வாகிகள் என்னை சந்திக்க வருவார்கள். இது வழக்கமாக நடைபெறும்" என்று தெரிவித்து, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-13/osl5nxk1/WhatsApp_Image_2025_02_12_at_15_51_57.jpeg)
இந்நிலையில், கோபிசெட்டிபாளையம் லக்கம்பட்டி பகுதியில் எம்ஜிஆரின் 108-ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், “அதிமுக-வில் உள்ள ஒவ்வொருவரையும் எனக்குத் தெரியும். 14 முறை எம்ஜிஆர் உடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டவன் நான். எம்ஜிஆர் 1972-இல் அதிமுக-வை தொடங்கிய போது பல்வேறு சோதனைகள் வந்தன. அப்போது அவருக்கு உறுதுணையாக நின்றவர்களில் நானும் ஒருவன்.
என்னை யாரும் சிக்க வைக்க முடியாது. இத்தனை ஆண்டுக்கால அரசியலில் பல தலைவர்களைப் பார்த்து விட்டுத்தான் இங்கு நிற்கிறேன். அது உங்களுக்கும் நன்றாகத் தெரியும். நான் செல்லும் பாதை எம்ஜிஆர் ,ஜெயலிலதா வகுத்துக் கொடுத்த பாதை. அத்திக்கடவு-அவிநாசி திட்ட பாராட்டு விழா நடத்திய குழுவினர் என்னை அழைத்தனர். ஆனால் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாத காரணத்தால்தான் அந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ளவில்லை.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-13/8w8qhly7/WhatsApp_Image_2025_02_12_at_21_31_27.jpeg)
என்னைப் பற்றி எத்தனையோ பேர் என்னவெல்லாமோ பேசி கொண்டு இருக்கிறார்கள். அதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. அதைப்பற்றி கவலையும் இல்லை. என்னைப் பொறுத்தவரை நேர்மையான பாதையில் அரசியல் செய்பவன் என்பதை யாராலும் மறுக்க முடியாது. எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் அதுபற்றி கவலைப்படாமல் இந்த இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தவன் நான். அதை மறந்து விடக் கூடாது. என்னை சோதிக்காதீர்கள். இதை நான் வேண்டுகோளாக வைக்கிறேன். அதிமுக இயக்கம் தொண்டர்கள் நிறைந்த இயக்கம். ஒற்றுமையோடு பணியாற்றக் கூடிய இயக்கம். விட்டுக் கொடுக்கும் இயக்கம் என்பதையும் மறந்து விட வேண்டாம். ஏதாவது கிடைத்துவிடாதா என்று எதையாவதைப் பரப்பி என்னையும், எதிர்க்கட்சியையும் தூங்க விடாமல் செய்து வருகின்றனர்" என்றார்.