கார் ஓட்டிக்கொண்டே மடிக்கணினியில் வேலை பார்த்த பெண்: காவல்துறை அபராதம்!
``என் மனைவி ISI ஏஜென்ட் என்றால், நான் RAW ஏஜென்ட்.." - பாஜக குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்.பி பதில்
காங்கிரஸ் எம்.பி கௌரவ் கோகோயின் மனைவிக்கு பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு இருப்பதாக பா.ஜ.க குற்றம்சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக பேசிய பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா, ``அஸ்ஸாம் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கௌரவ் கோகோய் மற்றும் அவரது மனைவிக்கு பாகிஸ்தான் மற்றும் ஐ.எஸ்.ஐ உடன் தொடர்பிருக்கிறது என்ற கவலையளிக்கும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-13/8z8pmh6h/GaeUiCPWUAApdH7.jpg)
கௌரவ் கோகோயின் மனைவி எலிசபெத் கோல்பர்ன் (sic), பாகிஸ்தான் திட்டக் கமிஷனில் ஆலோசகராக இருக்கும் தௌகிர் ஷேக்குடன் (sic) தொடர்பு கொண்டுள்ளார் என்பதை பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தீவிரமான பிரச்னை. எனவே கௌரவ் கோகோய் தெளிவான விவரங்களை வழங்க வேண்டும் என ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோரிடம் நாங்கள் கேட்கிறோம்.
எலிசபெத் கோல்பர்ன் ஏன் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ முகவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்? காங்கிரஸின் போராட்டம் இந்திய அரசுடன் தான் என்று ராகுல் காந்தி கூறிய கூற்றை நிறைவேற்ற அவர்கள் செயல்படுகிறார்களா? காங்கிரஸ் தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக ஐ.எஸ்.ஐ மற்றும் பாகிஸ்தானை ஆதரிக்கத் தொடங்குமா... இந்தியாவுக்கு எதிராக சதி செய்வதற்காக காங்கிரஸ் கட்சி பாகிஸ்தான், ஐ.எஸ்.ஐ-யின் சிறந்த நண்பராக மாறுவது ஏன்?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-13/iul292vg/GjdEwHAasAA0pGO.jpg)
இதே போன்றக் குற்றச்சாட்டை அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் முன்வைத்திருந்தார். இதற்கு பதிலளித்துப் பேசிய அஸ்ஸாம் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ் கோகோய், ``சல்மான் கானின் 'டைகர் ஜிந்தா ஹை' படத்தைப் போல, என் மனைவி ஒரு ISI ஏஜெண்டாக இருக்க முடியும் என்றால், நானும் ஒரு RAW ஏஜெண்டாகத்தான் இருக்க வேண்டும். பா.ஜ. க-வின் இது போன்ற ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகள் சிரிப்பைத்தான் வரவைக்கிறது. இது அவர்களின் பலவீனத்தையும் அவர்கள் வேகமாக தங்கள் நிலையை இழந்து வருவதையும் காட்டுகிறது.
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் குடும்பம் நில அபகரிப்பு வழக்குகளை எதிர்கொள்வதாலும், தொடர்ந்து அவதூறு வழக்குகளை எதிர்கொள்வதாலும் அவரின் பதவி பறிக்கப்பட்டு, புதிய பா.ஜ.க தலைவர் திலீப் சைகியா இரண்டு அல்லது மூன்று மாதத்தில் முதல்வராக நியமிக்கப்படலாம் என்ற அச்சம் அவருக்கு இருக்கிறது. அதனால், அவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக என்னவெல்லாமோ செய்து வருகிறார். அதில் இதுவும் ஒரு சூழ்ச்சி" என்றார்.